Students compete on developing India: Winners get chance to meet the Prime Minister - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 25, 2024

Comments:0

Students compete on developing India: Winners get chance to meet the Prime Minister



வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து மாணவர்களுக்கு போட்டி: வெற்றி பெறுவோர் பிரதமரை சந்திக்க வாய்ப்பு - Students compete on developing India: Winners get chance to meet the Prime Minister

வரும் 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தங்களது திட்டங்கள், யோசனைகளை தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுவோர் பிரதமர் முன்பு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்படும். மத்திய இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் சார்பில் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ என்ற போட்டி நடத்தப்படுகிறது. இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநர் செந்தில்குமார், நாட்டு நலப்பணி திட்டத்தின் மண்டல இயக்குநர் சி.சாமுவேல் செல்லையா, தெற்கு ரயில்வே உதவி விளையாட்டு அதிகாரி வி.தேவராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: அரசியல் பின்புலம் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் ‘வளரும் பாரதத்தில் இளம் தலைவர்களின் உரையாடல்’ நிகழ்ச்சி போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் தங்கள் யோசனைகள், திட்டங்களை, கருத்துகளை பிரதமர் முன்பாக சொல்வதற்கான வாய்ப்பாக இந்த போட்டிகள் அமையும். என்எஸ்எஸ் மாணவர்கள், கேந்திரிய வித்யாலயா மாணவர்கள், அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 15 - 29 வயதுக்கு உட்பட்ட அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம்.

இதற்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 25-ம் தேதி (இன்று) https://mybharat.gov.in என்ற இணையதளத்தில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஆன்லைன் விநாடி-வினா போட்டி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்டமாக 10 தலைப்புகளில் டிஜிட்டல் கட்டுரை போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களில், ஒவ்வொரு தலைப்புக்கும் 100 பேர் என மொத்தம் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் விளக்கக்காட்சி (பிபிடி) தயார் செய்து சென்னையில் நடுவர்கள் முன்பு சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு தலைப்பிலும் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் என 40 பேர் தமிழகம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லியில் 2025 ஜனவரி 11-ம் தேதி நடக்கும் பிபிடி விளக்கவுரை போட்டியில் பங்குபெறுவார்கள்.

அதில் வெற்றி பெறுவோர், சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தின விழாவில் பிரதமர் மோடி முன்பு தங்களது பிபிடிகளை சமர்ப்பித்து பேச வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்கள் நிச்சயம் வெற்றி பெற்று பிரதமரை சந்திப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews