அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2024

Comments:0

அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசு



அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசு

மண்ணில் குழி தோண்டி விளையாடிக் கொண்டிருந்தபோது முதலாம் ராஜராஜசோழன் (கி.பி.985-1012) பெயர் பொறித்த 1000 ஆண்டுகள் பழமையான ஈழக்காசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவிகள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் 2010-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.மகேந்திரன் கண்ணன் உள்ளார்.

தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தில் மாணவர்களுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்புல்லாணியைச் சேர்ந்த க.மணிமேகலை, சோ.திவ்யதர்ஷினி, செ.கனிஷ்காஸ்ரீ ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள் விடுமுறையில் வீட்டின் முன்பாக மண்ணில் குழி தோண்டி விளையாடியபோது ஒரு பழமையான காசு கிடைத்துள்ளது. அவர்கள் அதை எடுத்து வந்து பள்ளியின் ஆசிரியரும், ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளருமான வே.ராஜகுருவிடம் கொடுத்துள்ளனர். அந்தக் காசையும் அது கிடைத்த இடத்தையும் நேரில் ஆய்வு செய்த பின்,தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான வே.ராஜகுரு நம்மிடம் கூறியதாவது;மாணவிகள் கொடுத்தது, முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசு ஆகும். அவ்விடத்தில் கள ஆய்வு செய்தபோது சீனநாட்டு போர்சலின் ஓடு, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கசடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள் கிடைத்தன.

இக்காசின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறை உள்ளது. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்க, அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காசின் ஓரங்கள் தேய்ந்துள்ளன. முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் பொன், வெள்ளி, செம்புகளில் வெளியிடப்பட்டன. இது செம்பாலான காசு. ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் அகழாய்வுகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

இப்பள்ளி மாணவர்கள் ஏற்கெனவே திருப்புல்லாணியைச் சுற்றியுள்ள பஞ்சந்தாங்கி, தாதனேந்தல், கோரைக்குட்டம் ஆகிய ஊர்களில் இக்காசுகளை கண்டெடுத்துள்ளனர். இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை சோழர் ஆளுகையின் கீழிருந்த நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, பழமையான காசை கண்டறிந்து அதை பத்திரமாக ஒப்படைத்த மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews