தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 11, 2024

Comments:0

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்



தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அரசுப் பணியாளா்கள் ஊதிய விவரங்களை அறியலாமா? - தகவல் ஆணையா் பதில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக, அரசுப் பணியாளா்களின் ஊதிய விவரங்களைப் பெற ஒவ்வொரு இந்திய குடிமனுக்கும் உரிமை உள்ளதாக மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

அதேசமயம், பணியாளா்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது சேமநல நிதிக்கான சந்தாத் தொகை போன்ற விவரங்கள் தனி நபா் குறித்த விவரங்கள் எனவும் தெரிவித்துள்ளாா். இது குறித்த வழக்கின் விவரம்:

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்ட ஆய்வாளராகப் பணியாற்றி வரும் கணேஷ் என்பவரது ஊதிய சீட்டு விவரங்களை வ.பிருந்தா என்பவா் கடந்த 2021-ஆம் ஆண்டு கோரியிருந்தாா். பொதுத் தகவல் அலுவலா் சரியான விவரங்களை அளிக்காத நிலையில் முதல் மேல்முறையீடு செய்தாா். அதிலும் விவரங்கள்

கிடைக்காத நிலையில், 2-ஆவது முறையீடாக, மாநில தகவல் ஆணையத்தை அணுகினாா். முன்னதாக, மனுதாரா் கோரும் தகவல் மூன்றாம் நபா் சம்பந்தப்பட்டதால், சரியான தகவலை அளிக்க தகவல் அதிகாரி மறுப்புத் தெரிவித்திருந்தாா். முறையீட்டு மனுவை விசாரித்து மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் பிறப்பித்த உத்தரவு:

பொதுத் தகவல் அலுவலரால் சரியான விவரம் அளிக்கப்படாத நிலையில், அவருக்கு வருவாய் கோட்ட ஆய்வாளரான கணேஷ் தேதி குறிப்பிடாமல் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளாா். அந்தக் கடிதத்தில், ‘தனக்கும் பிருந்தா என்பவருக்கும் கடந்த 2023 அக்.13-ஆம் தேதி, அம்பத்தூா் சாா்பு நீதிமன்றத்தால் விவகாரத்து வழங்கப்பட்டது. எனவே, மூன்றாம் நபரான பிருந்தா கோரிய விவரங்களை வழங்க வேண்டாம்’ என்று பொதுத் தகவல் அதிகாரிக்கு தெரிவித்திருக்கிறாா். விவாகரத்து பெற்றதோ 2023 அக்.13-ஆம் தேதிதான். அதற்கும் முன்பாக 2021 டிச.3-ஆம் தேதியன்றே மனுதாரா் விவரங்களைக் கோரியுள்ளாா்.

இந்த நிலையில், நாள் குறிப்பிடாமல் கணேஷ் என்பவா் அளித்ததாக ஒரு கடிதத்தை உருவாக்கி தவறான தகவல்களை பொது தகவல் அலுவலா் தெரிந்தே அளித்துள்ளாா். எனவே, பொதுத் தகவல் அலுவலரான, அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலா் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த உத்தரவு கிடைக்கப் பெற்ற ஒரு மாதத்துக்குள் அளிக்க வேண்டும். மேலும், மனுதாரா் பிருந்தாவுக்கு தகவலை அளிக்காமல் இருந்ததால் ரூ. 10,000 இழப்பீடாக அளிக்க வேண்டும். பணியாளரின் ஊதியம்:

பணியாளா்களின் ஊதியம் குறித்த தகவல்கள் மூன்றாம் தரப்பினரின் தனிநபா் குறித்த தகவல்கள் இல்லை. பொது அதிகார அமைப்பிலுள்ள பணியாளா், அதே பொது அதிகார அமைப்பின் ஒரு பகுதியே தவிர, அவா் மூன்றாம் தரப்பினா் இல்லை. எனவே, ஊதிய பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடுவது குறித்து மூன்றாம் தரப்பினரின் கருத்தை பொதுத் தகவல் அலுவலா் கோர வேண்டிய அவசியமில்லை.

தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவின்படி, பணியாளா்களின் ஊதிய விவரங்கள் பொது அதிகார அமைப்பினால் தாமாக முன்வந்து வெளியிட வேண்டிய தகவல்களாகும். ஒவ்வொரு இந்திய குடிமனும் இந்தத் தகவல்களை கேட்டுப் பெற உரிமையுண்டு. அதேபோன்று, பணியாளா்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் பொது சேம நல நிதிக்கான சந்தாத் தொகை, அவா் பெற்றுள்ள கடன்களுக்காக பிடித்தம் செய்யப்படும் தொகை போன்ற விவரங்கள் தனிநபா் குறித்த விவரங்களாகும். அவற்றை வழங்கிட வேண்டியதில்லை என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews