அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 15, 2024

Comments:0

அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்



அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று முதல் விரிவாக்கம்

அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 செப்.15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

இத்திட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023 ஆக.25-ம் தேதி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வரால் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம், 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள். . இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் முதல்வர், நாளை (ஜூலை 15) காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். முதல்வரால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகுக்கே முன்னோடியான திட்டமாகத் திகழ்கிறது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews