72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 31, 2024

Comments:0

72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்



72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

72 ஆயிரம் மாணவர்களின் திறன் பயிற்சிக்காக ரூ.82 கோடியில் 17 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தாகின.

தமிழக தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு ஐசிடி அகாடமி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் 72 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 17 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதன்படி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 7,500 பட்டதாரி மாணவர்களுக்கு ‘கேப்ஜெமினி’ நிறுவனத்தில் 3 ஆண்டுகால திறன்பயிற்சி, ‘ஹனிவெல் ஹோம்டவுன் சொல்யூசன்ஸ் இந்தியா’ அறக்கட்டளை சார்பில் உயர்கல்வி பயிலும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு குறித்த 3 ஆண்டுகால திறன் பயிற்சிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 48 ஆயிரம் உயர்கல்வி மாணவர்களுக்கு ‘இன்போசிஸ்’ நிறுவனத்தில் 3 ஆண்டுகால பயிற்சி, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் 200 கல்வியாளர்கள், 3 ஆயிரம் உயர்கல்வி மாணவர்களுக்கு சைபர் பாதுகாப்பு பயிற்சி, தேசிய திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 8 ஆயிரம் உயர்கல்வி மாணவர்களுக்கு சில்லறை வணிகம், ஐடி துறைகளில் திறன் பயிற்சி, இதுதவிர மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் 1.35 லட்சம் பேருக்கு மேம்பட்ட பயிற்சி என 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு ஐசிடி அகாடமிநிறுவனம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்துஅவர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் 3 வகையான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி முதலாவதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சிஎஸ்ஆர் நிதியில், ஐசிடி அகாடமி மூலம் மாணவர்களுக்கு திறன்பயிற்சி அளித்து, 60 முதல் 80 சதவீத வேலைவாய்ப்புக்கு வழிவகுப்பது.

இரண்டாவதாக, மத்திய அரசின் துறைகளான மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தேசிய திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான திறன் பயிற்சி வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

மூன்றாவதாக கடந்தசட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஐசிடி அகாடமி பயிற்சி திட்டங்கள் பாலிடெக்னிக், கல்லூரிகளுக்கு மட்டுமின்றி ஐடிஐக்களுக்கும் பயன்படும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இன்றைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இன்னும் சில நாட்களில் 102 ஐடிஐக்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஐசிடி பயிற்சி திட்டங்களில் ஐடிஐ மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் ஐசிடி அகாடமி மூலம் ரூ.82 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு ஐசிடி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews