உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: முதல் 10 இடங்களுக்கான பரிந்துரையில் 5 இந்தியப் பள்ளிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 19, 2024

Comments:0

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: முதல் 10 இடங்களுக்கான பரிந்துரையில் 5 இந்தியப் பள்ளிகள்



உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: முதல் 10 இடங்களுக்கான பரிந்துரையில் 5 இந்தியப் பள்ளிகள்

உலகின் மிகச்சிறந்த பள்ளிகளுக்கான விருதுப்பட்டியலின் முதல் 10 இடங்களுக்கான பரிந்துரையில் இந்தியாவைச் சோ்ந்த 5 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

அதில் பல்வேறு பிரிவுகளில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 2 பள்ளிகள், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா ஒரு பள்ளி இடம்பிடித்துள்ளது. சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய பள்ளிகளைத் தோ்வுசெய்து, பிரிட்டனைச் சோ்ந்த ‘டி4’ கல்வி நிறுவனம் உலகின் சிறந்த பள்ளிகளுக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில், ‘சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை’, ‘புதிய கண்டுபிடிப்பு’, ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆதரவு’, ‘சமூக ஒன்றிணைப்பு’ மற்றும் ‘துன்பங்களை வெல்லும் வழி’ ஆகிய 5 பிரிவுகளின்கீழ் சிறந்து விளங்கிய பள்ளிகள் இந்தப் பட்டியலில் இடம்பெறுகின்றன.

நிகழாண்டுக்கான விருதுப் பட்டியல் குறித்து ‘டி4’ நிறுவனா் விகாஸ் போட்டா கூறியதாவது: புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்தும் வகையில் இந்தியாவைச் சோ்ந்த சில பள்ளிகள் செயல்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநிலம், ஜபுவாவில் உள்ள முதல்வரின் மாதிரிப் பள்ளி, ரத்லம் நகரில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தில்லி வசந்த் கஞ்சில் உள்ள ரேயன் சா்வதேச பள்ளிகள் பரிந்துரையில் உள்ளன. பரிந்துரையில் தமிழகப் பள்ளி: அதேபோல் தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள கல்வி சா்வதேச பள்ளி மற்றும் மும்பையில் உள்ள எல்.கே.வாக்ஜி சா்வதேச பள்ளி ஆகிய பள்ளிகளும் உலகின் சிறந்த பள்ளிகளுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன என்றாா்.

பல்வேறு பிரிவுகள்:

பழங்குடியின குழந்தைகளை வறுமையில் இருந்து மீட்கும் முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆதரவு’ என்ற பிரிவின்கீழ் ஜபுவாவில் உள்ள முதல்வரின் மாதிரிப் பள்ளி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதே பிரிவின்கீழ், துரித உணவுகளை தவிா்த்து நல்ல உணவுமுறையை பின்பற்றி வளமான வாழ்வை வலியுறுத்தும் முன்னெடுப்பை மேற்கொண்டதற்காக வாக்ஜி சா்வதேச பள்ளியும் இடம்பிடித்துள்ளது.

குடிநீா் பிரச்னைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுவை குறைப்பதற்கான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதால் ‘சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை’ என்ற பிரிவில் ரேயன் சா்வதேச பள்ளி இடம்பெற்றுள்ளது. நகரங்களில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தைச் சோ்ந்த சிறுமிகள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதால் ‘புதிய கண்டுபிடிப்பு’ என்ற பிரிவின்கீழ் ரத்லம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இடம்பிடித்துள்ளது.

எளிய பின்புலத்தில் இருந்து கல்வி பயிலும் மாணவா்களை சாதனையாளா்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வதால் ‘சமூக ஒன்றிணைப்பு’ என்ற பிரிவின்கீழ் கல்வி சா்வதேச பள்ளி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் வெற்றியாளா்கள் அறிவிப்பு: 5 பிரிவுகளிலும் பரிந்துரையில் இடம்பெற்றுள்ள 50 பள்ளிகளுக்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்பிறகு வெற்றி பெற்றவா்களை நிபுணா்குழு அறிவிக்கும். இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் இடம்பிடித்துள்ள முதல் மூன்று பள்ளிகள் குறித்த தகவல்கள் செப்டம்பரிலும் வெற்றிபெற்ற பள்ளிகள் குறித்த தகவல்கள் நவம்பரிலும் அறிவிக்கப்படும் என ‘டி4’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வெற்றியாளா் தோ்ந்தெடுக்கப்பட்டு 50,000 அமெரிக்க டாலா் (ரூ.41.76 லட்சம்) பரிசுத்தொகை பிரித்துக் கொடுக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews