பள்ளிக் கல்வித் துறை சார்பில் இன்று (9.1.2024) சென்னை, வர்த்தக மையத்தில் நடைபெற்ற “விழுதுகள்” அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் “விழுதுகள்” தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துரையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாசித்தார். அதில், "அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களாகிய உங்கள் அனைவரையும் இந்தக் காணொலி வாயிலாகச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்வதற்கு, மிக முக்கிய காரணம் கல்வியே. அத்தகைய கல்வியை அனைவருக்குமானதாக மாற்றிய பெருமை, நம் அரசுப் பள்ளிகளையே சாரும்.
தொடக்கக் காலகட்டம் முதல், இன்றைய நாள் வரை, அரசு பள்ளிகளே அனைவருக்குமான கல்வியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய சிறப்புக்குரிய அரசு பள்ளிகளில் படித்து, இன்றைக்கு வாழ்க்கையிலும், பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி,பல உயரங்களை எட்டியிருக்கிற, உங்கள் எல்லோரையும் மனதார வாழ்த்துறேன்.
”நம்முடைய அரசுப் பள்ளிகளை பேணி காப்போம்” : விழுதுகள் முன்னெடுப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
நாம் படித்த பள்ளிக்காக, நாம் எல்லோரும் திரும்ப, ஓரிடத்தில் ஒன்று கூடியிருக்கிறோம் என்பது மிகவும் முக்கியமான தருணம்.
இப்போது முதல், நாம் படித்த அந்த அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கான ஊக்கப்படுத்துபவராகவும், அந்தந்தப் பள்ளியிலுள்ள ஆசிரியர்களுக்கு நாம் உறுதுணையாகவும் இருப்பதோடு, அந்தப் பள்ளிக்கும் ஊருக்கும் இணைப்பை ஏற்படுத்துகிற, இணைப்பு பாலமாகவும், நாம் எல்லோரும் இருக்க வேண்டும். ‘நம் பள்ளி, நம் பெருமை!' என்கிற முழக்கத்திற்கு முன்னாள் மாணவர்களாகிய நீங்கள்தான் சொந்தக்காரர்கள். நீங்கள் தான் விழுதுகள். விழுதுகளாகிய நீங்கள் எல்லாம், ஒன்று சேர்ந்து நம் பள்ளி நம் பெருமை என்ற கூற்றை நிலை நிறுத்த வேண்டும். அதற்கு நாம் அனைவரும் பள்ளி மேலாண்மை குழுவோடு இணைந்து நம் பள்ளியின் மேம்பாட்டிற்காக செயலாற்ற வேண்டும்.
விழுதுகளாகிய ஒவ்வொருவரும், நம்முடைய அரசுப் பள்ளிகளை பேணி காப்பதையும், அவற்றை மேம்படுத்துவதையும் நமக்கான பொறுப்பாக எடுப்போம், அடுத்த தலைமுறையினருக்கான நம்பிக்கையாகவும் வழிகாட்டியாகவும் இருப்போம். நம் பள்ளி, நம் பெருமை என்பதனை நம் கடமையாக முன்னெடுத்துச் செயல்படுத்துவோம்" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.