பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற இராமதாசு வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 22, 2024

Comments:0

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற இராமதாசு வலியுறுத்தல்



பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்:

தொடர் வேலைநிறுத்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும்!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியம், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை முதல் பிப்ரவரி 10-ஆம் நாள் முதல் பல்வேறு கட்ட போராட்ட ஆயத்த பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. அவற்றின் உச்சமாக பிப்ரவரி 15-ஆம் நாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தையும், பிப்ரவரி 26-ஆம் நாள் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தப்போவதாக ஜாக்டோ -ஜியோ அமைப்பு அறிவித்திருக்கிறது. இந்தப் போராட்டம் தடுக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாகவும், பிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாண்டுகளுக்கு மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கடந்த 20 ஆண்டுகளாகவே அதிமுகவும், திமுகவும் மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கினாலும் அவை எதையும் இரு கட்சிகளின் அரசுகளும் நிறைவேற்றவில்லை. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய பல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் பெறப்பட்டாலும் கோரிக்கைகள் மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாக பொறுத்துப் பார்த்து, எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் ஜாக்டோ ஜியோ அமைப்பு தொடர் போராட்டங்களை அறிவித்திருக்கிறது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும், வேலை நிறுத்தப் போராட்டத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை ஆகும்.

மார்ச் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கப்படவுள்ளன. பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தகைய சூழலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், கல்வி எந்திரமும், அரசு எந்திரமும் முடங்கி விடும். இது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews