ஆசிரியர்களின் பாதுகாப்பையும்,மாணவர்களின் நலனையும் உறுதி செய்திட ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் கோரிக்கை
இது தொடர்பாக ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பொருளாதார பாட ஆசிரியர் திரு.கடற்கரை என்பவரை அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இருவர் அரிவாளால் வெட்டி காயப்படுத்திய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.சமீப காலமாக மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது. இது ஆசிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதோடு மட்டுமல்லாமல் நாளைய நம்பிக்கை நட்சித்திரமான மாணவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிறது.மாணவர்களை படிக்க சொல்லி கண்டிப்பதால் ஒரு ஆசிரியர் தாக்கப்படுவாரே ஆனால் மாணவர்களின் படிப்பின் மீதான ஆசிரியர்களின் அக்கறை குறையும்.ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே இடைவெளி ஏற்படும்.
இது மாணவ சமுதாயத்திற்கு நல்லதல்ல. கொரோணா பெருந்தொற்றுக்கு பிறகு மாணவர்களிடையே தீய பழக்க வழக்கங்கள் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணம். மேலும் ஒரு நாளின் 8 பாடவேளைகளும் பாடங்களை மட்டுமே கற்பிப்பதால் மாணவர்களிடையே ஒரு மனச்சோர்வு ஏற்படும்.ஓவியம்,உடற்கல்வி போன்ற மாணவர்களின் கலைத்திறனையும்,விளையாட்டுத் திறனையும் மேம்படுத்தும் வகையிலான பாடப்பிரிவுகள் தினம் ஒரு பாடவேளையாவது இருக்க வேண்டும்.இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து அவர்களை உற்சாகப்படுத்தும்.தற்போது இந்த பாடவேளைகள் இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகளில் இதற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பாட ஆசிரியர்களுக்கு தான் இந்த பாடவேளைகள் ஒதுக்கப்படுகிறது.எனவே அனைத்து பள்ளிகளிலும் இந்தப் பாட வேளைகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனநல ஆலோசகர்கள் மூலம் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறையேனும் ஆலோசனை வழங்க வேண்டும்.
ஆசிரியர்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு கடுமையான சட்டத்தை உருவாக்கி ஆசிரியர்ள் மற்றும் மாணவர்கள் நலனை உறுதி செய்திட வேண்டும் என ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கின்றோம்.
பழ.கௌதமன்
மாநிலத் தலைவர்
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.