ரூ.2 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி 10 ஆண்டுகளாகியும் தரம் உயராத அரசு உயர்நிலைப் பள்ளி A government high school that has not improved in 10 years after paying a deposit of Rs 2 lakh
தருமபுரி அருகே மிட்டா நூலஅள்ளியில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பணம் செலுத்திக் காத்திருக்கும் அரசுப் பள்ளியை விரைந்து தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிட்டா நூல அள்ளியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நடுநிலைப் பள்ளியாக இருந்து கடந்த 2002-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். நூல அள்ளி, உழவன் கொட்டாய், சின்ன நூல அள்ளி, சவுளூர், திருமலைக் கவுண்டன் கொட்டாய், என்.எஸ்.ரெட்டியூர், முத்துவேடி கொட்டாய், வீராலேரி, குளவிக் கண்ணன் கொட்டாய், வேடி கொட்டாய் உள்ளிட்ட ஏராளமான கிராமப் பகுதி மாணவ, மாணவியர் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மேல்நிலைக் கல்வியை பெற வெளியூர்களுக்கு செல்லும் நிலையை தடுக்கும் வகையில் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையேற்ற பள்ளிக் கல்வித்துறை, பள்ளியை தரம் உயர்த்த கிராம மக்கள் சார்பில் ரூ.2 லட்சம் வைப்புத் தொகை செலுத்த உத்தரவிட்டது. இதையடுத்து கிராம மக்கள் இணைந்து ரூ.2 லட்சம் பணம் திரட்டி கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வைப்புத் தொகையை செலுத்தினர். 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதுவரை இப்பகுதி மக்களின் மேல்நிலைப் பள்ளி கனவு நிறைவேறாமலே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பள்ளி நிர்வாகம் சார்பில் தரம் உயர்வுக்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படாததும், கோரிக்கை நிலுவையில் விடப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.நரசிம்மன், நூல அள்ளி ஊராட்சித் தலைவர் ராஜா ஆகியோர் கூறியது: மிட்டா நூலஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வைப்புத் தொகையும் செலுத்தப்பட்டு விட்டது. பள்ளி வளாகமும் 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. ஆனாலும், எங்கள் கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி மாணவ, மாணவியர் 100-க்கும் மேற்பட்டோர் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்கல்நாயக்கன்பட்டி, 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கட்டம்பட்டி, 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கியம்பட்டி ஆகிய மேல்நிலைப் பள்ளிகளுக்கு கல்வி பயில செல்கின்றனர். எனவே, தேவையற்ற அலைச்சல், நேர விரயம் ஆகியவற்றை தவிர்த்து எங்கள் பகுதி மாணவ, மாணவியர் உள்ளூரிலேயே மேல்நிலைக் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.