Siddha, Unani, Ayurvedic Medical Courses: General Section Counseling Begins Today - சித்தா, யுனானி, ஆயுா்வேத மருத்துவப் படிப்புகள்: பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
சித்தா, யுனானி, ஆயுா்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு வியாழக்கிழமை (அக்.26) நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 101 இடங்கள் நிரம்பின. இந்நிலையில், பொதுக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.27) தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க 2,500-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை, அரும்பாக்கத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, நாகா்கோவில் கோட்டாறு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த 5 அரசுக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.
இதேபோன்று 28 தனியாா் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. அந்த வகையில், இளநிலை சித்தா, யுனானி, ஆயுா்வேதம், ஹோமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்புகளுக்கு, நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அப்படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை (அக்.26) நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் மொத்தம் 89 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேபோன்று விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், யூனியன் பிரதேச ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 12 இடங்களும் நிரப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (அக்.27) முதல் அக். 29-ஆம் தேதி வரை அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும், 31-ஆம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், நவம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.