புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 72 மணி நேர உண்ணாவிரத போராட்டம், இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஜெயராஜ ராஜேஸ்வரன் தலைமையில் சேப்பாக்கம் அரசு வளாகத்தில் நேற்று நடந்தது. படம்: ம.பிரபு சென்னை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி அரசு ஊழியர்கள் (சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்)சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழையஒய்வூதிய முறையை அமல்படுத்தக் கோரி, அரசு ஊழியர்கள் அமைப்பான சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக 72 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் நேற்றுகாலை தொடங்கினர். இதில் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வகுமார், சு.ஜெயராஜ ராஜேஸ்வரன், பி.பிரடெரிக் எங்கெல்ஸ் உட்பட பலர் பங்கேற்று ஒற்றை கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். மேலும், பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களும் ஆதரவை தெரிவித்தன.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பின்பு பணியில் சேர்ந்த 6.28 லட்சம் ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளனர். இதன் இழப்புகளைக் கருத்தில்கொண்டு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
இந்தத் திட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படவில்லை. ஏற்கெனவே அமலில் இருந்த பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட்,சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம்ஆகிய மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டுவிட்டது. தற்போது தேர்தல் வாக்குறுதியின்படி கர்நாடகாவும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யவுள்ளது.
அதேபோல், தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்துசெய்யப்படும் என்று வாக்குறுதிஅளித்தது. ஆனால், ஆட்சிக்குவந்து இரண்டரை ஆண்டுகளைக்கடந்தும் இதுவரை தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, எங்கள் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்’’ என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.