விஸ்வகர்மா திட்டம் குலக் கல்வி திட்டம் இல்லை: கவர்னர் கருத்தும் எதிர்க் கருத்துக்களும்!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க., எதிர்க்கும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வெள்ளியன்று விஸ்வகர்மா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவர்னர் ரவி, “விஸ்வகர்மா ஒன்றும் குலக்கல்வித் திட்டம் இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக நஞ்சை பரப்புகின்றனர்” என விமர்சித்தது சமூக வலைதளங்களில் விவதாத்தை கிளப்பியுள்ளது. விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன?
கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது செங்கோட்டை உரையில் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். குடும்பத்தின் பாரம்பரிய தொழில்களை குறிப்பாக அழிந்து வரும் கைவினை தொழில்களை வலுப்படுத்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இத்திட்டத்திற்காக 2023 முதல் 2028 வரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கைவினைப் பொருட்களின் தரத்தை உயர்த்தி, அவற்றை உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைக்கு கொண்டு செல்ல இத்திட்டம் ஊக்குவிக்கும். இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் கைவினைக் கலைஞர்கள், பிற தொழில் செய்வோருக்கு முதல் தவணையாக ரூ.1 லட்சம், இரண்டாம் தவனையாக ரூ.2 லட்சம் கடன் வழங்கப்படும். குறிப்பாக இவற்றிற்கான வட்டி வெறும் 5% மட்டுமே.
இவைத் தவிர பயனாளிகளுக்கு திறன் மேம்பாடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்த உதவி, கருவிகளுக்கு ஊக்கத்தொகை ஆகியவையும் வழங்கப்படும்.
பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மொத்தம் 18 தொழில்கள் உள்ளன. தச்சர், படகு கட்டுபவர், கொல்லர், சுத்தியல் போன்ற இரும்புக் கருவிகள் செய்பவர், பூட்டு தயாரிப்பவர், குயவர், சிற்பி, செருப்புத் தைக்கும் தொழிலாளி, செருப்பு தயாரிப்பவர், மீன்பிடி வலை பின்னுபவர் போன்றவை அதில் அடக்கம். கவர்னர் பேசியது என்ன?
சிலர் எல்லாவற்றையும் அரசியல் கண்ணாடி அணிந்து பார்க்கின்றனர். அப்படி தான் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைக் குலக் கல்வித் திட்டம் என்று விமர்சிக்கின்றனர். இந்தத் திட்டம் அத்தியாவசிய தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மிகவும் சிறந்த முறையில் உதவும். அவர்கள் புதிய உபகரணங்களை வாங்கவும், தொழிலை பெருக்கவும் கடன் கிடைக்கும். தச்சர், கொல்லர் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களை விட்டுவிட முடியாது. ஆனால் இதனைக் குலக்கல்வி திட்டம் என்று சொல்லி மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.
தி.மு.க., பெயரைக் குறிப்பிடாமல் கவர்னர் இவ்வாறு பேசியிருந்தார். இதற்கு தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் எதிர்கருத்துக்களைக் கூறி வருகின்றனர். “யார் என்ன தொழில் செய்கிறார்களோ அத்தொழில் தொடர்பான கருவிகள் வாங்கவும், விரிவாக்கத்திற்கும் தான் கடன் தரப்படுகிறது. கேட்டால் பாரம்பரிய குடும்பத் தொழிலின் அறிவை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாக கூறுகின்றனர். அப்படி இல்லாமல் யார் வேண்டுமானாலும் எந்த தொழிலையும் தேர்வு செய்யலாம், மானிய வட்டியில் கடன் தருகிறோம், திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறோம் என்றால் பிரச்னை இல்லை.” போன்ற கருத்துக்களை தங்கள் தரப்பாக முன் வைக்கின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.