மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இடவசதி இல்லாததால் மாணவர்களை சேர்க்க முடியாமல் தவிக்கும் அரசு பள்ளி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 19, 2023

Comments:0

மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இடவசதி இல்லாததால் மாணவர்களை சேர்க்க முடியாமல் தவிக்கும் அரசு பள்ளி



மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: இடவசதி இல்லாததால் மாணவர்களை சேர்க்க முடியாமல் தவிக்கும் அரசு பள்ளி

கரூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இடவசதி இல்லாததால் கூடுதல் மாணவர்களை சேர்க்க முடியாமல் தவிக்கிறது அப்பள்ளி.

கரூர் அருகேயுள்ள நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 67 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கடந்த 2002-ம் ஆண்டு வெறும் 5 மாணவர்களுடன் பள்ளி மூடப்படும் நிலையில் இருந்தது. அப்போது பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ரா.விஜயலலிதா தனது தொடர் முயற்சியால் தனியார் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை அரசு பள்ளிக்கு கொண்டு வந்தார். மேலும், பள்ளியில் டைல்ஸ், மின் விசிறி, ஆர்.ஓ. குடிநீர், கணினி உள்ளிட்ட பல்வேறு வசதிகள், ஆங்கில வழி கல்வி ஆகியவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்தார். பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, பள்ளி அமைந்துள்ள பகுதி மட்டுமின்றி பிற இடங்களில் இருந்தும், தனியார் பள்ளிகளில் இருந்தும் இப்பள்ளிக்கு ஏராளமான மாணவர்கள் வந்து சேர்ந்தனர்.

அதிக தொலைவில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மாணவர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. கரோனா ஊரடங்கால் மாணவர்கள் பலரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளிகளை தேடி வந்த நிலையில் விஐபி சிபாரிசுடன் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர். இதனால் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 561 ஆக அதிகரித்தது.

வழக்கமாக பெற்றோரின் தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகள் மூடும் நிலைக்கு செல்லும் நிலையில் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியை தேடி வரும் மாணவர்களால் இப்பள்ளியை சுற்றி செயல்பட்ட 5 தனியார் பள்ளிகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு இப்பள்ளியில் சிசிடிவி கேமரா வசதி செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அதிகளவில் மாணவர்கள் சேர்க்கைக்கு வரும் நிலையிலும் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் மாணவர்களை சேர்க்க இயலவில்லை. தற்போது 427 பேர் கல்வி பயின்று வருகின்றனர். தேடி வரும் மாணவர்களை போதிய இடவசதியின்மை காரணமாக இடமில்லை எனக்கூறி அனுப்பும் நிலை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கரூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியாக உயர்ந்துள்ள இப்பள்ளிக்கு தேவையான இடத்தை வழங்கிஇப்பள்ளியை தேடி வரும் மாணவர்களை இங்கே சேர்க்கும் வகையில் கூடுதல் வகுப்பறைகளை கட்டித்தந்து, போதிய ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமைஆசிரியை ரா.விஜயலலிதா கூறுகையில், "பள்ளி கட்டிடம் கட்ட இடம் கேட்டுள்ளோம், மேலும் வகுப்பறைகள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களையும் கேட்டு வருகிறோம். இந்த ஆண்டும் பள்ளியின் தேவை குறித்து கேட்கப்பட்ட நிலையில் பள்ளி கட்டிடம் கட்ட இடமும், 5 வகுப்பறைகளும், கூடுதல் ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் கேட்டுள்ளோம்.

இவற்றை வழங்கினால் சேர்க்கைக்கு வரும் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள முடியும். தங்கள் குழந்தைகளை ஆவலோடு அரசு பள்ளிக்கு சேர்க்க வரும் பெற்றோரிடம் இடமில்லை என்று சொல்வதற்கு சங்கடமாக இருக்கிறது" என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews