விமான நிலைய மேலாண்மை பட்ட மேற்படிப்பு... வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 22, 2023

Comments:0

விமான நிலைய மேலாண்மை பட்ட மேற்படிப்பு... வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு!



விமான நிலைய மேலாண்மை பட்ட மேற்படிப்பு... வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு!

விமான நிலைய நிர்வாகம் என்பது இலகுவானதல்ல. பயணிகள் பாதுகாப்பு, அவர்களின் பொருள்களுக்குப் பாதுகாப்பு, எந்த நாட்டிற்குச்  செல்ல வேண்டுமோ அந்த நாட்டின் பணமாக நமது பணத்தை மாற்றுதல், சுங்கம், சுகாதாரம் , காலம் தவறாமை,  உபசரிப்பு,  பயணிகளின் மகிழ்ச்சி என பல கடமைகள் விமானநிலையத்தில் பணிபுரிவோருக்கு உள்ளது. எனவே விமான நிலைய நிர்வாகத்திற்கு படிப்பும் பயிற்சியும் அவசியமாகிறது. எம்.பி.ஏ.விமானத்துறை மற்றும் விமானநிலைய மேலாண்மை பட்ட மேற்படிப்பினை அழகப்பா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த படிப்பு கோயம்புத்தூர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள "நேரு காலேஜ் ஆப் ஏரோநாட்டிக்ஸ் அன்டு அப்ளையிடு சயின்ஸஸ்'  என்ற கல்லூரியில் உள்ளது.

இந்த படிப்பு குறித்து அந்த துறை தலைவர் பி.ஆர்.பாலாஜி நம்மிடம் பகிர்ந்து கொண்டவை: "விமானப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத்துறையில் நேரடி அன்னிய முதலீடு வந்து கொண்டே இருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்றுவரும் துறைகளில் முக்கியமானதாக உள்ளது விமானப் போக்குவரத்துறை. எனவே விமானத்துறை மற்றும் விமானநிலைய மேலாண்மை பட்டமேற்படிப்பு மிகவும் அவசியமாகிறது. இந்த படிப்புமூலம் விமான நிலையத்தை நிர்வாகம் செய்வது உள்ளிட்டவை  குறித்து படித்து வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

கடந்த 14 ஆண்டு காலமாக இந்த படிப்பு  எங்கள் கல்லூரியில் உள்ளது. இந்த  படிப்பில் சேர்வதற்கு ஏதாவது ஓர் இளங்கலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

அழகப்பா பல்கலைக்கழக விதிகளின்படி ஆண்டுக்கு 60 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த மாணவர்களுக்கு முதலில் அடிப்படை நிர்வாகம் குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும். பின்னர் ஏர்லயன் மார்கெட்டிங், ஏர்போர்ட் பாதுகாப்பு, ஏர்போர்ட் சட்டவிதிகள், விமானதளம் வரைபடம் தயாரித்தல், விமானநிலையச் செயல்பாடுகள், வருங்கால விமான நிலைய மேம்பாடு, பயணிகள் சேவை, அதனை மேம்படுத்துதல் குறித்து பாடமும் பயிற்சிகளும் அளிக்கப்படும்.

பின்னர் விமானம் இயங்கும் முறை, அதன் உதிரிபாகங்கள், விமானத்தை இயக்கும் முறை, டிஜிட்டல் முறைகள் குறித்து பாடங்கள் நடத்தப்படும்.

எங்களிடம் மாதிரி விமான நிலையம் உள்ளது. அதில் 12 விமானங்கள் உள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு விமான செயல்பாடு குறித்து நேரடிப் பயிற்சி அளிக்கப்படும். விமானத்தில் கோளாறு எற்பட்டால் அதனைச் சரி செய்வது, ஆபத்தான நேரங்களில் செயல்படும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மலேசியா , சிங்கப்பூர் என மாணவர்களை  கல்விச்சுற்றுலா என அழைத்துச்  செல்வோம். மாணவர்களுக்கு அங்குள்ள விமானநிலையச் செயல்பாடுகள், கண்காணிப்பு, பயணிகள் பாதுகாப்பு குறித்து நேரடியாகப் பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் சர்வதேச விமானச் செயல்பாடுகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள இயலும். தமிழகத்திலும் கோயம்புத்தூர், சென்னை ஆகிய ஊர்களில் உள்ள விமானநிலையங்களில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், அதனை எப்படிச் செயல்படுத்த வேண்டும், விமானத்தை எப்படி நிறுத்த ஆணையிடுவது, அதனை விமானதளத்தில் நிறுத்துவது , விமான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட பயிற்சிகளை நேரடியாக அளிப்போம். மாணவர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு சேவை என தனியாகச் சான்றிதழ் படிப்பும் உள்ளது. இதனை அனைத்து மாணர்களும் படிக்க வேண்டும்.

இறுதியில் மாணவர்கள் விமான நிலையங்களில் நேரடி பயிற்சி பெற்று ,அதனை அறிக்கையாக கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு  படித்த மாணவர்களுக்கு விமானநிலையத்திலும், தனியார் விமான சேவைகளிலும், விமான சரக்கு சேவை நிறுவனங்களிலும், விமான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன. எங்கள் கல்லூரியில் படித்த மாணவர்கள் துபாய், சிங்கப்பூர், கத்தார், குவைத் உள்ளிட்ட பலநாடுகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

ஆர்வமும் துடிப்பும் உள்ள மாணவர்கள் இதில் வெற்றி பெற்று வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்'' என்றார்.

- எஸ்.பாலசுந்தரராஜ்

https://nehrucolleges.org.in/About-Us/B.B.A-airline-airport-management.html

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews