கல்வித்துறையில் குறையுமா போட்டோ - டேட்டா கலாசாரம் - Is there a shortage in education? Photo - data culture
கல்வித்துறையில் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான 'கமிஷனர்' பதவிக்கு தற்காலிக மூடுவிழா நடத்தி மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவிக்கு முக்கியத்துவம் எழுந்துள்ள நிலையில், ஆசிரியர்களை படுத்தியெடுக்கும் தேவையில்லாத தரவுகளை பதிவேற்றம் செய்யும் நடைமுறையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அ.தி.மு.க., ஆட்சியில் பள்ளிக் கல்வி இயக்குநர் பதவி 'டம்மி' ஆக்கப்பட்டு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டு சிஜி தாமஸ் முதல் முறையாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் கமிஷனர், இயக்குநருக்கு உள்ள அதிகாரப் பகிர்வில் குழப்பங்கள் நீடித்தன. தி.மு.க., ஆட்சியில் நந்தகுமார் கமிஷனராக பொறுப்பேற்ற பின் அனுபவம் உள்ள இயக்குநர்களுக்கு முக்கியத்துவம் இல்லாமலும், களநிலவரம் தெரியாமல் வெளியிடப்பட்ட அறிவிப்புகளாலும் கல்வித்துறையில் குழப்பம் நீடித்தது.
குறிப்பாக இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா போன்ற திட்டப் பணிகளில் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்செயல்பாடுகள் குறித்து போட்டோக்கள் எடுத்தும், புள்ளிவிபரங்களை (டேட்டா) வெளியிட்டும் கல்வித்துறை சாதனைகளை அதிகாரிகள் அடுக்கினர். ஆனால் களநிலவரம் வேறாக உள்ளது என அப்போதே ஆசிரியர்கள் விமர்சனம் செய்தும் பயனில்லை.
போக்க்கொடி உயர்த்தின:
குறிப்பாக 'எமிஸ்' என்ற இணையதளத்தில் மாணவர், ஆசிரியர் வருகை உட்பட 200க்கும் மேற்பட்ட பிரிவுகளில் தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணியால் ஆசிரியர்கள் சோர்ந்து போகினர். அவர்களால் கற்பித்தல் பணியில் ஆர்வம் காட்டமுடியவில்லை. கற்றல் கற்பித்தலில் ஆசிரியர், மாணவருக்கு உள்ள பிரச்னைகளை கமிஷனரை எளிதில் சந்தித்து தீர்வுகாண முடியவில்லை என சங்கங்களும் போர்க்கொடி உயர்த்தின. இதன் விளைவாக கமிஷனருக்கு பதில் மீண்டும் இயக்குநர் பதவிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதில் இயக்குநராக அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: குறிப்பாக எமிஸில் தேவையில்லாத பதிவேற்றங்களை குறைக்க இயக்குநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினி தெரிந்த ஆசிரியர் அல்லாத ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
'டீம் விசிட்' என்ற பெயரில் ஆசிரியர்களை அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டும். சர்வர் பிரச்னையால் 'எமிஸ்' மூலம் நடக்கும் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாதக்கணக்கில் நடக்கிறது. இதை தவிர்க்க பழைய முறையில் நடத்த வேண்டும். ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினால் நீதிமன்ற வழக்குகள் குறையும். தற்போது பொறுப்பேற்றுள்ள இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன் (தொடக்க கல்வி) ஆகியோர் ஆசிரியர்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.