கல்வி விருது வழங்கும் விழா.. நடிகர் விஜய் செலவு செய்தது இத்தனை கோடியா? நெகிழும் ரசிகர்கள்
நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவுக்காக எத்தனை கோடி செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 234 தொகுதிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள், நல்ல மதிப்பெண்களை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடிகர் விஜய் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த விழாவுக்காக 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ரசிகர்கள் யாருக்கும் கலந்து கொள்ள அனுமதியில்லை. அதே வேளையில் ரசிகர் மன்றத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்த விழா நீலாங்கரையில் அதாவது விஜயின் வீடு உள்ள பனையூர் பங்களா அருகே ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளின் போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகளை விஜய் ஏற்றுக் கொண்டார். தனியார பேருந்துகளை ஏற்பாடு செய்து மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
அவர்கள் வீடு போய் சேரும் வரை இவர்களது செலவுதான். விஜய்யின் இந்த நிகழ்வுக்காக அவரை எப்படியாவது காண வேண்டும் என அந்த பகுதியில் ரசிகர்கள் அதிக அளவில் திரண்டுவிட்டனர். இந்த நிலையில் அவர்களை போலீஸாரும் மன்ற நிர்வாகிகளும் ஒழுங்குப்படுத்தினர். விழா நடக்கும் இடத்திற்கே விஜய் காரில் தன்னுடைய ரசிகர்கள் வெள்ளத்தில் நீந்திதான் வந்தார். மாணவ, மாணவிகளுக்கு காலை இட்லி பொங்கல், வடை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அது போல் மதியம் சைவ விருந்து தடபுடலாக தயார் செய்யப்பட்டது. விழாவுக்கு வந்த அனைவரிடமும் விஜய் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்றார்.
இந்த நிலையில் இந்த விழாவுக்காக விஜய் ரூ 2 கோடி செலவு செய்ததாக தெரிகிறது. விழா நடந்த இடத்திற்கு மட்டும் வாடகையே ரூ 40 லட்சமாம். மாணவர்களின் போக்குவரத்து செலவு, தங்குமிடம், உணவு உள்ளிட்ட என அனைத்தும் ரூ 2 கோடியில் அடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கட் அவுட் , பேனர் யாரும் வைக்கக் கூடாது என விஜய் உத்தரவிட்டதன் பேரில் அந்த பகுதியில் ஒரு கட் அவுட் கூட இல்லை.
பொதுவாக விஜய் தனது பிறந்தநாளின் போது கட் அவுட் , பேனர் வைப்பதை விட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது, ரத்த தானம் செய்வது என இருக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு எப்போதுமே அறிவுறுத்தி வருவார். விஜய்யை பார்த்த மகிழ்ச்சியில் மாணவர்கள் துள்ளி குதித்தனர். அவர்களுடன் விஜய் பொறுமையாக பேசி அவர்களின் சிறிய சிறிய ஆசைகளையும் நிறைவேற்றினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.