பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 23, 2023

Comments:0

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னையில் பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது. மே மாதம் சம்பளம், ஊதிய உயர்வு எதுவுமே இதுவரை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இறந்துபோனவர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கி முதல்வர் ஆறுதல் கூறி உள்ளார். ஆனால் பணி காலத்தில் இறந்த பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்களுக்கு முதல்வர் எதுவுமே செய்யவில்லை.

2012-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி,இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் ஆகிய பாடங்களில் 5 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டனர். வாரம் 3 அரை நாட்கள் என்ற ரீதியில் மாதம் 12 அரை நாட்கள் பணிபுரிய வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும் கூடுதலாகவே பணிபுரிகிறோம். சம்பள உயர்வுமுதன் முதலில் 2014-ம் ஆண்டுரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு ரூ.700 உயர்த்தப்பட்டது. கடைசியாக 2021-ம் ஆண்டு ரூ.2,300 சம்பளம் உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.10,000 ஊதியம் பெறுகிறோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கி தமிழக முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் கோரி, பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர்.

தமிழக அரசு பள்ளிகளில், 12 ஆண்டுகளுக்கு முன், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.

ஓவியம், தையல், இசை, கணினி, தோட்டக்கலை, கட்டடக்கலை உள்ளிட்ட தொழிற்கல்வி பாடங்கள் நடத்தும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் கோடை விடுமுறை என்பதால், அந்த மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில், தங்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் பணி வழங்குமாறும், பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்குமாறும் கோரி, சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews