முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை 85% அதிகரிப்பு: சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 14, 2023

Comments:0

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை 85% அதிகரிப்பு: சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல்

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை 85% அதிகரிப்பு: சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல்

முதல்வரின் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ – மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் ‘‘முதல்வரின் காலை உணவு திட்டம்’’ அறிவிப்பை சட்டப்பேரவையில் கடந்தாண்டு மே 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்.15ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் பலரின் வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற நிலையில் ‘‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’’ கூடுதலாக 433 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 1,969 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 54 ஆயிரத்து 108 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டம் சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் மூலமாகவும், சென்னை தவிர பிற மாநகராட்சிகளில் நகராட்சி நிர்வாக துறை மூலம் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் வாயிலாகவும் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப்பகுதிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மூலம் கிராம பஞ்சாயத்துகள் அல்லது மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். மேலும் மாணவ, மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், ரத்தசோகை குறைபாட்டினை நீக்கவும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் குறிக்கோள்கள்.

இவற்றுடன் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்து அவர்களின் கல்வி திறனை அதிகரிப்பதும் இந்த திட்டம் தொடங்கப்பட்டதின் முதன்மை நோக்கங்களில் ஒன்று.

இத்திட்டம் முதல் கட்டமாக கடந்த ஆண்டு செப்.15ம் தேதி செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் கடந்த 6 மாதங்களில் மாணவர்களின் வருகை மொத்தமாக 85 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சமூக நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு செய்த போது 1540 பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி 624 பள்ளிகளில் 0 முதல் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 10 முதல் 20 சதவீதமும், 171 பள்ளிகளில் 20 முதல் 30 சதவீதம் வரையும் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் திட்டம் செயல்படுத்தப்பட்ட பள்ளிகளையும் அதே பகுதியில் திட்டம் செயல்படுத்தப்படாத பள்ளிகளையும் ஒப்பிடும் போது 77 சதவீதம் காலை உணவு வழங்கப்படும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த திட்டம் பொதுமக்களிடமும், குறிப்பாக பெற்றோர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சுய உதவிக் குழுக்களில் சீரான பொருளாதார நடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளது. இத்திட்டத்தை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சமையல் கூடங்களில் உணவு தயாரான நேரம், பள்ளிக்கு உணவு கொண்டுவரப்பட்ட நேரம், உணவின் தரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் பதிவேற்றப்படும்.

இந்த தகவல்களை ஆணையர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கண்காணிப்பர். தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் இல்லாத பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews