அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 25, 2023

Comments:0

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் - பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை
தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 48 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. செங்கோட்டையன் (அதிமுக), பிரின்ஸ் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்டோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள். அவர்கள் பேசியதாவது: மொழித்தேர்வை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் பாடம் கட்டாயம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். உறுப்பினர்களின் பேச்சுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதும் மாணவர்கள் 2020-21ல் கொரோனா காலக்கட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வே எழுதாமல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள். இவர்களில் 47 ஆயிரத்து 943 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை. இவர்கள் அனைவரையும் ஜூலை மாதம் நடைபெறும் பிளஸ் 2 துணைத்தேர்வை எழுத வைப்பதற்காக முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இடைநிற்றல் மாணவர்களை துணைத்தேர்வுக்கு அழைக்கும்போது பெற்றோர் தவறாமல் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் சேரும் அனைத்து மாணவர்களும் பிளஸ் 2 வரை முழுமையான கல்வியை கற்க வேண்டும் என்பதில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இடைநிற்றல் மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்து 4 வாரங்கள் வரை அவர் வரவில்லை என்றால் அவரை இடைநின்ற மாணவராக கருதி நேரில் சென்று பள்ளியில் மீண்டும் சேர்க்க அறிவுறுத்தியுள்ளோம். வட்டார, மாவட்ட அளவிலான அதிகாரிகள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். துணைத்தேர்வு மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது. இடைநிற்றல் மாணவர்களை ஆசிரியர்கள் நேரில் சென்று அழைத்தால் பெற்றோர் மறுக்காமல் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை இந்த அரசு பார்த்துக்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews