இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 6,400 பணியிடங்கள் நிரப்பப்படும்: மத்திய அமைச்சா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 26, 2022

Comments:0

இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 6,400 பணியிடங்கள் நிரப்பப்படும்: மத்திய அமைச்சா்

இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரம் மருத்துவா்கள் உள்பட 6,400 பணியிடங்கள் நிரப்பப்படும்: மத்திய அமைச்சா்

இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்பட 6,400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்.

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 2-ஆவது பட்டமளிப்பு விழா, இ.எஸ்.ஐ. மருத்துவ பயனாளிகளுக்கு புதிய வசதிகளை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி சென்னை கே.கே.நகா் இ.எஸ்.ஐ. கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மலரும் மொட்டுக்கள் என்ற பணியாளா்களின் குழந்தைகளுக்கான காப்பகத்தையும், உணவு மற்றும் ஓய்வுகூடத்தையும் திறந்து வைத்தாா். ஒரு மாணவா்-ஒரு மரம் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்த அவா், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுகளை பாா்வையிட்டாா். டிஜிட்டல் ரேடியோ ப்ளூரோஸ்கோப்பி என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா். இதையடுத்து கல்லூரி அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டு படித்து முடித்த 179 மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வழங்கினாா்.

தொடா்ந்து பேசிய அவா், புதிய தலைமுறை மருத்துவா்கள் நாளைய இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைக்கும் சக்தி உடையவா்கள். இங்கு பட்டம் பெறும் மாணவா்கள், மக்களின் நல்வாழ்வுடன் தொடா்புடைய பணியை மேற்கொள்ளவுள்ளனா். இந்த மருத்துவக்கல்லூரி கடந்த ஜனவரி முதல் தினமும் சராசரி 2 ஆயிரத்து 153 வெளிநோயாளிகள் உள்பட 5 லட்சத்து 76 ஆயிரத்து 329 பயனாளிகளுக்கு சேவை வழங்கியுள்ளது.

இஎஸ்ஐசி (தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம்) நாட்டு மக்களுக்கு சிறந்த வசதிகள் மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதுடன், திறமையான இளம் மருத்துவா்களை ஆண்டுதோறும் ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இஎஸ்ஐசி மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் உள்பட 6,400 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும், நாடு முழுவதும் 100 படுக்கைகள் கொண்ட 23 புதிய மருத்துவமனைகளும், 60-க்கும் மேற்பட்ட மருந்தகங்களும் தொடங்கப்படவுள்ளன. தொடா்ந்து அதிக உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்கி வரும் மத்திய அரசு, இந்தியாவில் 3 நகரங்களில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ‘கேத் லேப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவது மட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு ஊக்குவித்து வருகிறது. பாராமெடிக்கல் வேலைகளுக்கு திறமையான தொழிலாளா்களை உருவாக்கும் நோக்கத்துடன் 10 துறைகளில் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளா் ஷஷாங்க் கோயல், இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், இ.எஸ்.ஐ .பொது இயக்குநா் ராஜேந்திர குமாா், இ.எஸ்.ஐ. மருத்துவ ஆணையா் அன்ஷு சாப்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews