மருத்துவக் கல்வியில் 50 % இடங்கள் ஒதுக்கீடு 10 நாள்களுக்கு நிறுத்தி வைப்பு: சென்னை உயா்நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 19, 2022

Comments:0

மருத்துவக் கல்வியில் 50 % இடங்கள் ஒதுக்கீடு 10 நாள்களுக்கு நிறுத்தி வைப்பு: சென்னை உயா்நீதிமன்றம்

மருத்துவக் கல்வியில் 50 % இடங்கள் ஒதுக்கீடு 10 நாள்களுக்கு நிறுத்தி வைப்பு: சென்னை உயா்நீதிமன்றம்

மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவ (‘சூப்பா் ஸ்பெஷாலிட்டி’) படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்வதை 10 நாள்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில், அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு 2020-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அரசாணை பிறப்பித்தது. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கு (2022-2023) மொத்தமுள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநா் அறிவிப்பு வெளியிட்டாா். இதை எதிா்த்தும் தமிழக அரசு 2020-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு மருத்துவா்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி அரசு மருத்துவா்கள் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்பட இருவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமாா் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2021-2022-ஆம் ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவா்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அடுத்த கல்வியாண்டுகளுக்கும் பொருந்தும் என்பதால் கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தாா். இதுசம்பந்தமாக எந்த விளக்கமும் பெறத் தேவையில்லை என மனுதாரா்கள் தரப்பு வக்கீல் சங்கரன் குறிப்பிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமாா், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதியளித்த உச்சநீதிமன்ற உத்தரவு நிகழ் கல்வியாண்டுக்கு பொருந்துமா? என்பதை உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாள்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டாா்.

அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரா்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews