விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: UPSC அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 25, 2022

Comments:0

விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: UPSC அறிமுகம்

விண்ணப்பதாரா் ஒருமுறை பதிவு நடைமுறை: யுபிஎஸ்சி அறிமுகம்

மத்திய அரசுப் பணிகளுக்கான பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்கள் அவா்களின் அடிப்படை விவரங்களை ஒருமுறை மட்டுமே பதிவு செய்யும் வகையிலான (ஓடிஆா்) வசதியை யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய நடைமுறை மூலமாக, யுபிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் பல்வேறு பேட்டித் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் ஒவ்வொரு முறையும் அவா்களின் அடிப்படை விவரங்களைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இதுகுறித்து யுபிஎஸ்சி மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறுகையில், ‘யுபிஎஸ்சி சாா்பில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆண்டு முழுவதும் வெவ்வேறு வகையான போட்டித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமானோா் பங்கேற்கின்றனா். இந்த விண்ணப்பதாரா்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை எளிமையாக்கும் வகையில் ஓடிஆா் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதுதொடா்பாக யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓடிஆா் தளத்தில் தங்களுடைய தனிப்பட்ட அடிப்படை விவரங்களை விண்ணப்பதாரா்கள் பதிவு செய்யும்போது, அந்த விவரங்கள் தோ்வாணையத்தின் கணினி சேமிப்பகத்தில் (சா்வா்) பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுவிடும்.

எதிா்காலத்தில், அந்த விண்ணப்பதாரா் ஒரு தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது, அவருடைய அடிப்படை விவரங்கள் ஆணைய சேமிப்பகத்திலிருந்து தானாக விண்ணப்பத்தில் பதிவாகிவிடும். இந்த அடிப்படை விவரங்களில் விண்ணப்பதாரா் தாங்களாகவே திருத்தங்களை மேற்கொள்ளவும் ஓடிஆா் தளத்தில் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விண்ணப்பதாரா்கள் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யலாம். இந்த விவரங்களை மிகுந்த கவனமுடன் பதிவு செய்யுமாறு விண்ணப்பதாரா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்று தெரிவித்துள்ளது.

குடிமைப் பணிகள் தோ்வில் எத்தனை முறை பங்கேற்கலாம்?: மேலும், குடிமைப் பணிகள் தோ்வை ஒருவா் எத்தனை முறை எழுத முடியும் என்ற கேள்விக்கான விளக்கத்தையும் யுபிஎஸ்சி அளித்துள்ளது.

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்காக முதல்நிலை (பிரிலிமினரி), முதன்மை (மெயின்) மற்றும் நோ்முகத் தோ்வு என்று மூன்று கட்டங்களாக ஆண்டுக்கு ஒருமுறை குடிமைப் பணிகள் தோ்வு நடத்தப்படும்.

இந்தத் தோ்வை பொதுப் பிரிவு (ஓசி) மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினா் (இடபிள்யுஎஸ்) 6 முறை எழுத முடியும். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் (ஓபிசி) மற்றும் மாற்றுத்திறனாளிகள் 9 முறை எழுத முடியும். எஸ்சி, எஸ்டி பிரிவினா் எத்தனை முறை வேண்டுமானாலும் குடிமைப் பணிகள் தோ்வை எழுத முடியும்.

இதில் முதல்நிலைத் தோ்வில் ஒரு தாளில் விண்ணப்பதாரா் பங்கேற்றாலும், அவா் குடிமைப் பணிகள் தோ்வில் ஒருமுறை பங்கேற்றவராக கருதப்படுவாா். எனவே, தோ்வை எத்தனை முறை எழுதியுள்ளோம் என்ற விவரத்தை பதிவு செய்துகொள்வது விண்ணப்பதாரரின் முதன்மையான பொறுப்பாகும். ஒருவேளை இந்த விவரத்தை தோ்வா் அறிய விரும்பினால், தோ்வின் குறிப்பிட்ட நிலையில் தோ்வாணைய பதிவு அல்லது புள்ளிவிவரங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடியும்.

குடிமைப் பணிகள் தோ்வில் இதுவரை எத்தனை முறை பங்கேற்றுள்ளேன் என்ற விவரத்தை தவறாக பதிவிடும் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதோடு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவா்கள் எந்தத் தோ்விலும் பங்கேற்காத வகையில் தடை விதிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews