தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 27, 2022

Comments:0

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு எப்போது? பொன்முடி அறிவித்தார்

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலந்தாய்வு ஏன் ஒத்திவைக்கப்பட்டது?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆக. 25ஆம் தேதி தொடங்கவிருந்த பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், தமிழகத்தில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வராமல் பொதுக் கலந்தாய்வை நடத்தும்போது, மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மருத்துவம், பொறியியல் படிப்புகள் என இரண்டு கலந்தாய்வுகளுக்கும் மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். மேலும், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தினால், மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்து மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் போது, பொறியியல் படிப்புகளில் காலியிடங்கள் உருவாகும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான், நீட் தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நாள்களில் பொறியியல் பொதுக் கலந்தாய்வு நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய அரசு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வர காலதாமதம் ஆனதால், முன்பு பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போனது. இப்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாக காலதாமதம் ஆவதால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இணையதளம் வழியாக கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்) கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.

நீட் முடிவு எப்போது?

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. 497 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் https://neet.nta.nic.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews