பட்டியலின ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை: கொடுத்த கடனை கேட்டதற்கா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 17, 2022

Comments:0

பட்டியலின ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை: கொடுத்த கடனை கேட்டதற்கா?

ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த ஆசிரியர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ராஜஸ்தான் பள்ளியில் குடிநீர் பானையைத் தொட்டதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது பட்டியலின ஆசிரியர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.



ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் ரைசர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா ரீகர் (32). பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் ராஜ்வீர் (6) உடன் காலையில் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரைச் சூழ்ந்துகொண்ட ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலர், அனிதாவைச் சூழ்ந்து தாக்க முயன்றனர்.



அப்போது அங்கிருந்து தப்பியோடிய அனிதா, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்து காவல் துறையின் அவசர உதவி எண் 100-க்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். எனினும் காவலர்களால் அப்பகுதிக்கு சென்றடையமுடியவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர்.



சம்பவம் அறிந்து அனிதாவின் கணவர் உறவினர்களுடன் சம்பவம் நடந்த பகுதிக்குச் சென்றுள்ளார். 70 சதவிகித காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின்படி ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு ஒரு வாரம் மருத்துவர் கண்காணிப்பிலிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கடந்த 10ஆம் தேதி காலை 8 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவம் அனிதா, உயிரிழந்த பிறகு இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.



அனிதாவிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 6 பேர் தன்னை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகாவும், 3 பெண்களுக்கும் இதில் தொடர்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சம்பவம் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டுள்ளார். அவர்கள் கடனைக் கொடுக்க மறுத்துள்ளனர். அனிதா தொடர்ந்து கொடுத்த பணத்தைக் கேட்டதால், ஆத்திரமடைந்த நபர் கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக அனிதா வாக்குமூலம் அளித்துள்ளார்.



இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள காவல் துறையினர், இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளனர்.



கடந்த சில நாள்களுக்கு முன்பு ராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்டதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவரை ஆசிரியர் அடித்ததில், படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews