4,308 காலிப் பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 21, 2022

Comments:0

4,308 காலிப் பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர்

4,308 மருத்துவ காலிப் பணியிடங்களை செப்டம்பர் இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழக முழுவதும் காலியாக உள்ள 4308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்து மருத்துவமனையை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 27 லட்சம் தடுப்பூசிகள் இன்றைக்கு கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகளையும் போடுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி போட்டவர்கள் கூட கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என கூறினார். தமிழக முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் தில்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள், கோவையில் புதிய மருத்துவ கல்லூரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கையோடு தடுப்பூசிகளும் முடிந்துவிட்ட நிலையில் இருக்கிற காரணத்தினால் தடுப்பூசிகளும் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையோடு சந்திக்க உள்ளோம்.

இந்தியாவிலேயே தாய் சேய் மரணம் குறைவாக இருப்பது தமிழகத்தில்தான். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி 65 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர், இந்த திட்டம் உலகத்திற்கு முன்மாதிரியான திட்டமாக இருப்பதால் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மன்றம் மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் செல்கிறார் அவருடன் தமிழக மருத்துவ துறை சார்பாக தமிழக அரசு பங்கேற்க இருக்கிறது. அதில் இல்லம் தேடி மருத்துவம் தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை மற்றும் தக்காளி அம்மை நோய்களால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளா-தமிழக எல்லையில் 13 இடங்களில் கண்காணிப்புகள் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும் தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கூட முழுவதுமாக பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் 10 சதவீதம் அளவுக்கு மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews