துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல்; மத்திய பல்கலைகளின் மையமாக மாற்ற திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 10, 2022

Comments:0

துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல்; மத்திய பல்கலைகளின் மையமாக மாற்ற திட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்திகிராம பல்கலையின் புதிய துணைவேந்தர் நியமனத்தில் விதிமீறல் உள்ளதாக கூறி ஆட்சி மன்ற குழுவினர் மூவர் ராஜினாமா செய்துள்ள நிலையில் மத்திய பல்கலை மையமாக மாற்ற திட்டம் உள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

1956ல் காந்தி சீடர்களால் துவக்கப்பட்ட இந்நிறுவனம் 1976ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய அரசு நிதி உதவி பெறும் பல்கலையாக உயர்ந்தது. மத்திய பல்கலையாக 2 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.துணைவேந்தரை தலைவராக கொண்டுள்ள இப்பல்கலை மூத்த பேராசிரியர் 1 மூத்த புல முதல்வர்கள் 2 மூத்த இணை பேராசிரியர் 1 மத்திய உயர் கல்வி அமைச்சகம் சார்ந்த 4 பேர் வேந்தர் நியமிக்கும் 3 பேர் என 12 பேரை ஆட்சி மன்ற குழுவாக கொண்டுள்ளது. பெங்களூரு சமூக பொருளாதார மாற்றத்திற்கான ஆய்வு மைய இயக்குனராக பணியாற்றிய மாதேஸ்வரன் 2021 ஆகஸ்டில் புதிய துணைவேந்தரானார். அடுத்த 3 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்ய மூத்த பேராசிரியர் டி.டி.ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தரானார். புதிய துணைவேந்தர் தேர்வுக்காக பீஹார் மத்திய பல்கலை முன்னாள் துணைவேந்தர் ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரங்கநாதனை உடனடியாக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விடுவித்து புதுச்சேரி பல்கலை துணை வேந்தர் குர்மித் சிங் வேந்தர் பொறுப்பை கூடுதலாக வழங்கி உள்ளதாக பல்கலைக்கு மத்திய உயர்கல்வி அமைச்சகத்திடம் இருந்து மெயில் வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சி மன்ற குழுவை சேர்ந்த பல்கலை பேராசிரியர்கள் ஆனந்தகுமார் பாலசுந்தரி வில்லியம் பாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். விதிமீறல்

பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:சமீபகாலமாக பல்கலையின் பதிவாளர் நியமனம் டில்லி மையம் அமைத்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என மத்திய தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவிக்க பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் டில்லி மையமும் மூடப்பட்டது. தற்போது எவ்வித காரணமும் தெரிவிக்காமல் ரங்கநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். பல்கலை மானிய குழு விதியை சார்ந்தே காந்திகிராம பல்கலை நெறிமுறைகள் உள்ளது.

இதன்படி பொறுப்பு துணைவேந்தராக இதே பல்கலையை சேர்ந்த மூத்த பேராசிரியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விதி மீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.இது போன்ற விதிமீறல்கள் தொடரும் பட்சத்தில் பல்கலை வளர்ச்சி தடைபட்டு திருவாரூர் புதுச்சேரி போன்ற மத்திய பல்கலைகளின் மையமாக இப்பல்கலை மாற்றப்படும் அபாயம் உருவாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews