பள்ளியில் திடீர் ஆய்வு வகுப்பறை ஓட்டைகளை சீரமைக்க கூட மதிப்பீடா? அதிகாரிகளுக்கு மேயர் பிரியா கிடுக்கிப்பிடி கேள்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 28, 2022

Comments:0

பள்ளியில் திடீர் ஆய்வு வகுப்பறை ஓட்டைகளை சீரமைக்க கூட மதிப்பீடா? அதிகாரிகளுக்கு மேயர் பிரியா கிடுக்கிப்பிடி கேள்வி

சிறுசிறு வேலைக்கு கூட மதிப்பீடு வேண்டுமா என அரசு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மேயர் பிரியா அதிகாரிகளிடம் கிடுக்கிபிடி கேள்வி கேட்டார். மேலும், உடனே வகுப்பறைகளை சீரமைக்கவும் அதிரடியாக உத்தரவிட்டார். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 44வது வார்டு, நியூ காமராஜர் நகர் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று மாலை திடீரென ஆய்வு செய்தார். அவர், ஒரு வகுப்பறைக்குச் சென்றபோது வகுப்பறையில் ஆங்காங்கே ஓட்டையாக சரியாக கலவை பூசாமல் இருந்தது. இதை பார்த்த மேயர், குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஏன் இந்த இடத்தை இப்படி வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதற்கு அதிகாரிகள், இதற்காக மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
அதற்கு மேயர், இந்த சிறிய வேலைக்கு கூட மதிப்பீடு செய்து அதன் பிறகுதான் வேலையை செய்வீர்களா என கேட்டார். உடனே அதிகாரிகள் உடனே முடித்து விடுகிறோம் என கூறினர். இன்று (நேற்று) இரவுக்குள் பணியை முடித்து எனது மொபைலுக்கு போட்டோ அனுப்பி வையுங்கள் என்று கூறினார். அடுத்த வகுப்பில் ஒரு மாணவன் பள்ளி சீருடை அணியாமல் வண்ண சீருடையில் இருந்தான். அந்த சிறுவனிடம், ஏன் பள்ளி சீருடை அணியவில்லை என கேட்டதற்கு, எனக்கு சீருடை தரவில்லை என கூறினான். இதுகுறித்து அருகில் இருந்த ஆசிரியரிடம் மேயர் விசாரிக்கையில், சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு மட்டுமே சீருடை வழங்க வேண்டும் என்ற ஆணை உள்ளது. இந்த சிறுவன் சத்துணவு சாப்பிடவில்லை என கூறினார். பிறகு பெரம்பூர் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அங்கு குறைவான அளவில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். ஏன் முக்கியமான சாலையில் இவ்வளவு குறைவாக ஆட்களை வைத்து வேலை செய்கிறீர்கள். அதிக ஆட்களை வைத்து வேலை செய்ய வேண்டியதுதானே என கேட்டு யார் உங்கள் கான்ட்ராக்டர் என கேள்வி கேட்டார். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், நாளையிலிருந்து அதிக ஆட்களை வைத்து வேலை செய்கிறோம் என்று பதில் அளித்தனர். தொடர்ந்து, முத்தமிழ் தெரு பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அங்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடப்பதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, அதிகாரிகளை கடிந்துகொண்ட மேயர், தகுந்த பாதுகாப்புடன் பணிகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 44வது வார்டு கவுன்சிலர் சர்ப ஜெயாதாஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews