நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 543 நகரங்களில் நடைபெறவுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தமிழ், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு எழுதுவதற்காக நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கூடுதலாக 2.57 லட்சம் பேர் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 10,64,606 பெண்கள், 8,07,711 ஆண்கள் 12 மூன்றாம் பாலினத்தவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 31,803 பேர் தமிழ் மொழியில் எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். நாளை பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு நடைபெறவுள்ளதையடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதில், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து குறைந்தபட்சம் இரு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
பிற்பகல் 1.30 மணிக்கு நீட் தேர்வு மைய நுழைவாயில் மூடப்படும். அதன்பின் மாணவர்களுக்கு அனுமதியில்லை.
மாணவர்கள், பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டின் உரிய இடத்தில் இருக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப் பதிவு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும்.
பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்சை அவசியம். மாணவர்கள் செல்போன்களில் கொண்டுவரும் அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேர்வு மையத்தில் வழங்கப்படும் என்.95 முகக்கவசத்தை மாணவர்கள் கட்டாயம் அணிய வேண்டும்.
தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என இரு முறை வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும்.
மாணவர்கள் வெளியே தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில், கூடுதல் புகைப்பட நகல்களை வைத்திருக்கலாம்.
செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதனப் பொருளையும் மாணவர்கள் தேர்வறைக்குள் கொண்டுவரக் கூடாது என்பன உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.