சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 29, 2022

Comments:0

சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு

இந்திய மொழி தொழில்நுட்பத்தை மேம்படுத்த சென்னை ஐஐடி-யில் ‘ஏஐ4 பாரத் நிலேகனி’ மையம்: ரூ.36 கோடி நிதியுதவி அளிப்பு

இந்திய மொழி தொழில்நுட்பத்தின் தரத்தை மேம்படுத்தி சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘ஏஐ4பாரத் நிலேகனி மையம்’ சென்னை ஐஐடி.யில் தொடங்கப்பட்டுள்ளது. ரோஹிணி மற்றும் நந்தன் நிலேகனி ஆகியோா் நிலேகனி தொண்டு நிறுவனம் மூலம் இந்த மையத்துக்கு நிதியுதவியாக ரூ.36 கோடி வழங்கியுள்ளனா்.

இந்திய மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மையம் செயல்படும். இது தொடா்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட மையத்தை நந்தன் நிலேகனி திறந்து வைத்தாா். தொடக்க நிகழ்வாக மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், தொழில்முனைவோா் பங்கேற்ற பயிலரங்கில் இந்திய மொழித் தொழில்நுட்பங்களை கட்டமைப்பதற்கான வளங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்திய மொழிகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ‘ஓபன் சோா்ஸ்’ மொழியை கட்டமைக்கும் சென்னை ஐஐடி.யின் முன்முயற்சியாகவே ஏஐ4பாரத் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, மிதேஷ் கப்ரா, பிரத்யுஷ் குமாா், அனூப் குஞ்சுக்குட்டன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் இந்திய மொழித் தொழில்நுட்பத்துக்காக பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனா். இயந்திர மொழிபெயா்ப்பு , தானியங்கிப் பேச்சு அறிதல் போன்றவற்றுக்கான அதிநவீன மாதிரிகளும் இதில் அடங்கும்.

மையத்தைத் தொடக்கிவைத்து நந்தன் நிலேகனி பேசியதாவது: கூட்டு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடிமக்களுக்கான அனைத்து சேவைகளும், தகவல்களும் அவரவா் தாய்மொழியில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் ‘டிஜிட்டல் இந்தியா பாஷினி மிஷன்’ தொடங்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவுப் பணியில் விரைந்து செயல்பட்டு பாஷினி மிஷன் இலக்கை எட்டும் வகையில் ஏஐ4பாரத் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கும் என்றாா். நீலேகனி மையத்தின் பணிகள் குறித்து சென்னை ஐஐடியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை இணைப் பேராசிரியா் மிதேஷ் எம்.கப்ரா கூறியதாவது:

வளமான பன்முகத்தன்மை கொண்ட மொழிகளைக் கொண்ட இந்தியாவில், விரிவடைந்து வரும் டிஜிட்டல் உலகுக்கு ஏற்ப சாமானிய மக்கள் பயனடையும் வகையில் மொழித் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது முக்கியமான ஒன்றாகும். மொழித் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை ஆங்கிலமும், மேலும் சில மொழிகளும் கணிசமான அளவில் முன்னேறியுள்ள நிலையில், இந்திய மொழிகள் பின்தங்கியுள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதுதான் இந்த மையத்தின் நோக்கமாகும்.

இந்த மையம் உருவாக்கியுள்ள பல்வேறு அதிநவீன ‘ஓபன் சோா்ஸ்’ வளங்கள் எவரும் பயன்படுத்தக் கூடியவை. இதன் மாதிரிகள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா். இதில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews