பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சியால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அரசுப் பள்ளியில் இடநெருக்கடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 04, 2022

Comments:0

பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சியால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: அரசுப் பள்ளியில் இடநெருக்கடி

12th
பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சியால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வெங்கம்பாக்கம் அரசுப் பள்ளியில் இடநெருக்கடி

கல்பாக்கம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை ஏளிய மாணவர்களுக்கு ஞானம் தரும் போதிமரமாக இருக்கிறது வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி.

25 ஆசிரியர்களைக் கொண்டு சுமார் ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அறிவை புகட்டும் அரும்பணியை செய்து வருகிறது. நடந்து முடிந்த பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்ற 113 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். செங்கல்பட்டு மாவட்ட அளவில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற ஒரே அரசுப்பள்ளி என்ற சாதனையை நிகழ்த்தியது.

இதேபோல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஏற்கெனவே 6 முறை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

பள்ளியின் பெருமை அறிந்து ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க வெங்கம்பாக்கம் அரசு பள்ளிக்கு படையெடுக்க, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாததது பெருங்குறையாக உள்ளது.

ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 17 செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில்தான் தற்போது பள்ளி இயங்கி வருகிறது. போதுமான வகுப்பறைகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் இடநெருக்கடியுடன் கல்வி கற்கின்றனர். கழிப்பறை வசதிகளும் சொல்லும்படி இல்லை என்பது கூடுதல் துயரம். இதேபள்ளியில் படிக்கும் 10 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கே போதுமான வகுப்பறைகள் இல்லாததால், புதிதாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தனை நெருக்கடியிலும் முழுமையான தேர்ச்சி குறித்து தலைமை ஆசிரியை மீனாகுமாரியிடம் கேட்டபோது, “கல்வி மட்டுமின்றி ஒழுக்கம் மற்றும் வாழ்க்கைக் கல்வி குறித்தும் கற்பிக்கிறோம். ஆசிரியர்களுக்கு பெற்றோர் தரப்பில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கிறது.

இதனால்தான் 100 சதவீத தேர்ச்சி சாத்தியமானது. நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை 1,200-த்தை தாண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் பெருமை பொங்க.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறியதாவது: பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேநேரம் இடநெருக்கடியைப் போக்க பள்ளிக்கு கூடுதல் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும். இடம் தந்தால் சென்னை அணுமின் நிலையம் வகுப்பறை கட்டித் தர தயராக உள்ளது.

இங்குள்ள வனத்துறை நிலம் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலம் என 67 ஏக்கரில் 5 ஏக்கரை ஒதுக்கினால் போதும். விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வகத்துடன் கூடிய கட்டிடங்களை கட்ட முடியும்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுத் துறைகளுக்கு மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கைதான் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews