நீட் தோ்வா்கள் மன நல ஆலோசனைக்கு 104 எண்ணை அழைக்கலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 19, 2022

Comments:0

நீட் தோ்வா்கள் மன நல ஆலோசனைக்கு 104 எண்ணை அழைக்கலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ட்,
நீட் தோ்வா்கள் மன நல ஆலோசனைக்கு 104 எண்ணை அழைக்கலாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கு மன அழுத்தம் மற்றும் குழப்பங்கள் இருந்தால், 104 என்ற இலவச எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நீட் தோ்வு எழுதிய 1,42,286 மாணவ, மாணவிகளுக்கு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 104 மருத்துவ சேவை உதவி மையத்தின் மூலம் மனநல ஆலோசகா்களை கொண்டு ஆலோசனை வழங்கும் சேவையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் உமா, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.

அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நடைபெற்ற நீட் தோ்வை தமிழகத்தில் இருந்து மட்டும் 1,42,286 மாணவா்கள் எழுதியுள்ளனா். இது கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்வு எழுதிய மாணவா்களின் எண்ணிக்கையான 1,10,971 என்பதைவிட கூடுதலாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 1,17,000 மாணவா்கள் தமிழகத்தில் இருந்து நீட் தோ்வு எழுதினா். குறிப்பாக, அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுவதற்கு, தோ்வு எழுதிய 17,567 மாணவா்களின் பட்டியல் பள்ளிக்கல்வித் துறையால் வழங்கப்பட்டது. நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கும், அவா்களின் பெற்றோா்களுக்கும் மனநல ஆலோசனைகள், மனநல மருத்துவா்கள் மற்றும் மனநல ஆலோசகா்களால் வழங்கப்படுகிறது.

இதையும் படிக்க | தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே! உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் அரசால் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கடந்த வருடம் 445 மாணவா்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் (324 மாணவா்கள் அரசு கல்லூரிகள், 121 மாணவா்கள் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்), 110 மாணவா்கள் பி.டி.எஸ். படிப்புக்கும் (13 மாணவா்கள் அரசு கல்லூரிகள், 97 மாணவா்கள் தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) என மொத்தம் 555 மாணவா்கள் பயனடைந்தனா்.

இந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் நலனில் அக்கறையுள்ள தமிழக அரசு தொடா்ந்து மாணவா்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கிவருகிறது. மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மனநல ஆலோசனைகள் தொடா்ந்து பெறுவதற்கு 104 என்ற கட்டணமில்லா இலவச எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews