காலியாக உள்ள 444 எஸ்ஐ பதவிகளுக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 2.21 லட்சம் பேர் எழுதினர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 26, 2022

Comments:0

காலியாக உள்ள 444 எஸ்ஐ பதவிகளுக்கு எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 2.21 லட்சம் பேர் எழுதினர்

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள எஸ்.ஐ. பதவிகளுக்கான எழுத்து தேர்வு மாநிலம் முழுவதும் 39 மையங்களில் நடந்தது. 444 பதவிகளுக்கு 2.21 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர்(தாலுகா மற்றும் ஆயுதப்படை) (ஆண், பெண் மற்றும் திருநங்கை) பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 8ம் தேதி வெளியிடப்பட்டது.

இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர் இந்த எழுத்து தேர்வு எழுத சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. இந்த தேர்வை 1 லட்சத்து 77 ஆயிரத்து 676 ஆண்கள், 43 ஆயிரத்து 494 பெண்கள், 43 திருநங்கைகள் என தேர்வு எழுதினர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள 39 மையங்களில் 197 அறைகளில் எழுத்து தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெறும் மையம் மற்றும் அறைகளில் சிசிடிவி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வு நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு முடிந்தது. இந்த எழுத்து தேர்வு முதல் முறையாக தமிழ்மொழியிலும் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தமிழ்மொழியில் எழுதும் தேர்வர்களுக்கு பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி 5.10 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 10 மையங்களில் நடந்தது. அதில் 7,080 ஆண்கள், 1506 பெண்கள் உட்பட மொத்தம் 8,586 பேர் தேர்வு எழுதினர்.

தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டில் 8 மையங்களில் 7,074 ஆண்கள், 1,516 பெண்கள் உட்பட மொத்தம் 8,590 பேர் எழுதினர். ஆவடி மாநகர காவல் கட்டுப்பாட்டில் 12 மையங்களில் 6,994 ஆண்கள், 1,499 பெண்கள் உட்பட மொத்தம் 8,493 பேர் தேர்வு எழுதினர். அதேபோல், காவல் துறையில் பணியில் இருப்பவர்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews