பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 26, 2022

Comments:0

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கம்

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
2022-23-ம் கல்வியாண்டுக்கான வருடாந்திர நாட்காட்டி வெளியீடு, ஆன்லைன் சேவைகள் தொடக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று தொடங்கி வைத்தார். உடன் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர்.

தமிழ்வழிச் சான்று உள்ளிட்ட 25 வகையான பள்ளி ஆவணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான வசதியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில், வரும் கல்வியாண்டுக்கான (2022-23) நாட்காட்டி வெளியீடு மற்றும் ஆன்லைன் சேவைகள் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:

தமிழ்வழியில் படித்தமைக்கான சான்று, கல்வி இணைச் சான்று உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்களை, இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் பெறுவதற்கான வசதி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

பதிவேடுகள் மின்மயமாக்கல்

அதேபோல், ஆசிரியர்களின் நிர்வாகப் பணியைக் குறைக்க 100-க்கும் மேற்பட்ட பதிவேடுகளை மின்னணுமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக 30 பதிவேடுகள் மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதேபோல் வரும் கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுப்பு விவரங்கள் அடங்கிய நாட்காட்டி, ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான அட்டவணை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஆசிரியர்கள், மாணவர்கள், திட்டமிட்டு தங்கள் பணிகளை மேற்கொள்ள வழி செய்யும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து அமைச்சர் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் மாணவர்களுக்கான புத்தகம், சீருடை உள்ளிட்ட இலவசக் கல்வி உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படும். அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட இருமடங்கு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக ஆராய்ந்து தேர்வெழுதாத மாணவர்களைச் சந்தித்து அவர்களை உத்வேகப்படுத்தி, துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் கல்வியாண்டில் நீட் தேர்வு பயிற்சிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே உள்ள ஹைடெக் ஆய்வகம் மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. காலை சிற்றுண்டி திட்டம்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார்.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, பணி நிரந்தரம், தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அரசின் நிதிநிலை சீரான பின்னர் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews