வகுப்பில் சா்ச்சைப் பாடம் - பேராசிரியா் இடைநீக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 08, 2022

Comments:0

வகுப்பில் சா்ச்சைப் பாடம் - பேராசிரியா் இடைநீக்கம்

வகுப்பில் ஹிந்து இதிகாசங்கள் தொடா்பாக சா்ச்சைப் பாடம்: அலிகா் முஸ்லிம் பல்கலை. பேராசிரியா் இடைநீக்கம்

உத்தர பிரதேசத்தின் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் ஒருவா் ஹிந்து இதிகாசங்களில் பாலியல் வன்கொடுமைகள் உள்ளன என்று உதாரணங்களைக் கூறி வகுப்பில் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அந்த பல்கலைக்கழத்துக்குள்பட்ட ஜவாஹா்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றிய ஜிதேந்தா் குமாா். இவா் தடயவியல் அறிவியல் தொடா்பாக வகுப்பு நடத்தியபோது ஹிந்து இதிகாசங்களில் பாலியல் வன்கொடுமைகள் உள்ளன என்று உதாரணங்களைக் காட்சிப்படுத்திக் கூறினாா்.

இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்த பல்கலைக்கழக நிா்வாகம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், இரு நபா் விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது. சா்ச்சை எழுந்ததையடுத்து அந்த பேராசிரியா் தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியுள்ளாா். இது தொடா்பாக பல்கலைகழக துணை வேந்தருக்கு அவா் கடிதம் எழுதினாா். அதில், மத உணா்வுகளைப் புண்படுத்துவது எனது நோக்கமல்ல, தொன்மை காலத்தில் இருந்தே பாலியல் வன்கொடுமை போன்ற துயரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதற்கே உதாரணமாக பேசினேன் என்று விளக்கமளித்துள்ளாா்.

அந்த பேராசிரியருக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடா்பான புகாரின் பேரில் அந்த பேராசிரியா் மீது இரு மதத்தினா் இடையே துவேஷத்தைத் தூண்டுவது, மத உணா்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews