தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 09, 2022

Comments:0

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்

குறைந்தபட்ச தகுதி பெறாத ஆசிரியர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிறப்பித்த உத்தரவை கண்டிப்புடன் நிறைவேற்ற, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊக்க ஊதியம்

கடந்த 2009ம் ஆண்டு, இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுபவர், அதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அதுகுறித்த அறிவிப்பாணையை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011ல் பிறப்பித்தது. இந்நிலையில், 2011க்கு முன் பணியில் நியமிக்கப்பட்டு, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டது. தகுதி தேர்வு தேர்ச்சியை வலியுறுத்தாமல், ஊக்க ஊதியம் வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இம்மனுக்களை, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன், கூடுதல் பிளீடர் வி.நன்மாறன் ஆஜராகினர்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கல்வி பெறும் உரிமை சட்டம் இயற்றப்பட்டு, 12 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. மனுதாரர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல், பணியில் நீடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி என்ற தகுதியை, 2019 மார்ச் மாதத்துக்குள் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, குறைந்தபட்ச தகுதியான, தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், பள்ளிகளில் பணியில் தொடர்வதற்கு உரிமை இல்லை. போதிய பயிற்றுவிக்கும் திறனை மதிப்பிட, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மனுக்கள் தள்ளுபடி

கடந்த 2017ல் கொண்டு வந்த சட்ட திருத்தத்தின்படி, தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவதற்கான அவகாசம், 2019 மார்ச் மாதத்தில் முடிந்து விட்டதாகவும், மேற்கொண்டு கால நீட்டிப்பை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

சட்டம் இயற்றப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், ஊக்க ஊதியம் பெற உரிமை இல்லை. மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச தகுதியை பெறாத ஆசிரியர்கள் தொடர்பாக, தேவையான நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி, மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர்களுக்கு, 2019 மே மாதம், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவை, கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த வழிமுறைகளின் படி, ஆண்டுக்கு ஒரு முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசிடம் தகுந்த நிவாரணம் கோருவது, பள்ளி கல்வித் துறையைப் பொறுத்தது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews