CPS வல்லுந‌ர் குழு அறிக்கையும்! நிலவில் வடை சுடும் ஆயாவும்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 18, 2022

Comments:0

CPS வல்லுந‌ர் குழு அறிக்கையும்! நிலவில் வடை சுடும் ஆயாவும்!!

CPS வல்லுந‌ர் குழு அறிக்கையும்! நிலவில் வடை சுடும் ஆயாவும்!! _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை 14.03.22 அன்று அரசிற்கு அளித்துள்ளது. அக்கடிதத்தில் அடங்கிய ஓய்வூதியம் தொடர்பான ஒரு கோரிக்கைக்கு மட்டும், அதுசார்ந்து பதிலளிக்கும் பொறுப்புடைய நிதித் (ஓய்வூதியர் குறை தீர்) துறை 08.04.22 அன்று ஓர் விளக்கத்தை அளித்துள்ளது. அவ்விளக்கமே தற்போது ஆசிரியர் & அரசு ஊழியர்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாகி, சமூக & செய்தி ஊடகங்களின் தயவால் கானல் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.

தலைப்பைப் பார்த்த பின்னும் ஏதோ எதிர்பார்ப்போடே இப்பதிவை நீங்க வாசிக்கிறீங்கனா, முதல்ல Deep Breath எடுத்துக்குங்க. . . கொஞ்சம் தண்ணி குடிச்சுக்குங்க. . . எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி, நமது எதிர்காலம் சார்ந்து விடை தேட வேண்டிய கேள்வியோடே மட்டும் தொடர்ந்து வாசிங்க. . . . நிலாவுல பாட்டி வடை சுடுறாங்க என்பதை இப்போது நாம் நம்புவோமா? மாட்டோம்ல. அதே மாதி அந்தக் கடிதத்தையும் அதுசார்ந்து வெளிவந்த செய்திகளையும் எந்த விதத்திலும் நம்பாதீங்க! ஏன்னா மேற்படி கடிதத்தை வைத்து சமூக ஊடகங்களில் உலாவரும் நேர்மறையான அனைத்து செய்திகளும் அந்தக் கதையைப் போன்றதே. எப்டீனு கொஞ்சம் விளக்கமா பார்ப்போமா. . . .

2003-ல் முன்தேதியிட்டு அஇஅதிமு CPS-ஐ நடைமுறைப்படுத்திய நிலையில், முன்னதாக திமுக இது தொடர்பான (NPS) நாடாளுமன்ற மசோதாவுக்கு ஆதரவு அளித்து வாக்களித்திருந்ததாலும், 2016 தேர்தல் வரையிலும் (13 ஆண்டுகள்) இவ்விரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்த வாக்குறுதி இடம்பெறவேயில்லை. எனினும், 2011 தேர்தலில் செல்வி.ஜெ.ஜெ பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வாக்குறுதியைத் தமது பரப்புரையில் அறிவித்தார். ஆனாலும், அதன்பின் 4 ஆண்டுகளாக பேச்சுமூச்சில்லை.

2016 பிப்ரவரியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் & தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவை சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார் செல்வி.ஜெ.ஜெ.

(இன்றைய தேதியில் இறந்தாலோ ஓய்வு பெற்றாலோ கட்டிய தொகையாகிலும் அரசின் பங்களிப்பு & வட்டியுடன் கிடைக்கிறதென்றால் அதற்கும் இந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டமே காரணம். இப்போராட்டத்தின் விளைவாகத்தான் 13 ஆண்டுகாலம் கழித்து கட்டிய தொகையை வழங்குவதற்கான அறிவிப்பும் அரசாணையும் வெளிவந்தது.)

10 இலட்சம் அரசு ஊழியர் & ஆசிரியர் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வல்லுந‌ர் குழுவின் தலைவர் பொறுப்பிற்குப் பலர் தொடர்ந்து மாற்றப்பட்டு, 7 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு, 2 ஆண்டுகளில் 10 நாள்கள் மட்டுமே கூட்டம் கூடி 27.11.2018-ல் தமிழ்நாடு அரசிடம் குழுவின் அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

எப்ப ஒப்படைக்கப்பட்டது. . . நல்ல்ல்ல்லா சத்தமா வாசிங்க. . . 2018 நவம்பர் 27-ஆம் தேதி!

அதாவது, தற்போது கானல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிதித்துறை கடிதம் வெளிவந்த நாளில் இருந்து சரியாக, 3 ஆண்டு 4 மாதம் 13 நாள்களுக்கு முன்பு! அதாவது 1229 நாள்களுக்கு முன்பே வல்லுந‌ர் குழுவின் அறிக்கை அப்போதைய அஇஅதிமுக ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

அதன்பின்னர் சுமார் 2 ஆண்டுகள் இந்த வல்லுந‌ர் குழுவின் அறிக்கை குறித்து அஇஅதிமுக ஆட்சியாளர்கள் வாய்திறக்கவே இல்லை.

இந்தக் காலகட்டத்தில் தான் சனவரி 2019 ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தமும் நடைபெற்றது. வல்லுநர் குழு அறிக்கையில் சாதகமான குறிப்புகள் இருந்திருப்பின் போராட்டத்தைத் தவிர்க்கவோ / 2021 சட்டசபைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் வாக்குவங்கியைத் தன்வசமாக்கவோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை அஇஅதிமுக நடைமுறைப்படுத்தியிருக்கும். ஆனால், அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என்பதால் வல்லுநர் குழுவின் அறிக்கை நிலை குறித்து ஓரளவு நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், வல்லுநர் குழுவின் இறுதி நிலையில் உறுப்பினர்களாக இருந்த நால்வரில் ஒருவர் திரு.சண்முகம் இ.ஆ.ப. இவர் நீண்ட காலம் நிதித்துறையிலேயே பொறுப்பில் இருந்து இறுதியாக் கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதித்துறை) பொறுப்பு வரை வகித்து ஓய்வுபெற்றவர். வல்லுநர் குழு அறிக்கை சாதாகமாக இருந்திருக்குமெனில், குழு உறுப்பினரே நிதித்துறையின் உயர் பொறுப்பிலும் இருந்தபோது நடைமுறைப்படுத்துவது எளிதாக இருந்திருக்குமே ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை.

சட்டீஸ்கர் & இராஜஸ்தான் அரசுகள் வெளியிட்ட NPS ஒழிப்பு அறிவிப்புகள் தொடர்பாக சென்ற மாதம் The Hindu-வில் வெளியான பேட்டியில், நீண்ண்ண்ண்ண்ட காலம் நிதித்துறை பொறுப்பு வகித்து ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஒருவர், "அதெல்லாம் சாத்தியமே இல்லை. அப்படி நடந்தால் அது பெரும் அவலம்" என்று கூறியிருந்தார். இவர் யாரென்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

சரி. இந்த வல்லுந‌ர் குழு அறிக்கை தொடர்பான ஒரு புரிதல் தங்களுக்கு வந்திருக்குமென நம்புகிறேன். இனி, இந்த அறிக்கை தொடர்பான கடிதங்களுக்கு அரசு தரப்பில் இதுவரை அளிக்கப்பட்டுள்ள பதில்கள் என்னவென்று பார்ப்போம்.

★ '*CPS வல்லுநர் குழுவின் அறிக்கையினை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும். தங்களது கோரிக்கை அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது'* என்று 02.12.2020-ல் தனிநபர் ஒருவரின் கடிதத்திற்கு நிதித் துறை சார்புச் செயலாளர் தகவல் தெரிவித்திருந்தார்.

★ *'வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை அரசு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும்'* : இது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 18.03.2020-ல் CM CELL-ல் அளித்த மனுவிற்கு 18.12.2020-ல் நிதித் துறை சார்புச் செயலாளர் தெரிவித்த பதில்.

★ *'வல்லுநர் குழுவின் அறிக்கை அரசாங்கத்தின் பரிசீலனையின் கீழ் உள்ளது. அதில் எடுக்கப்படும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDA-வுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும்'* : இது நிதித்துறை சிறப்புச் செயலாளர் 16.06.2021-ல் வெளியிட்ட அரசு தகவல் மையத்தின் 07.04.2021 தேதியிட்ட கடிதம். ★ *'வல்லுநர் குழுவின் அறிக்கையினை நன்கு பரிசீலித்து உரிய முடிவினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசாணைகள் வெளியிடப்படும்'* : இது தற்போது (08.04.22) தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்திற்கு நிதித் துறை சார்புச் செயலாளர் தெரிவித்துள்ள பதில்.

மேற்படி பதில்களில், 2020-ல் அஇஅதிமுக ஆட்சி காலத்தில் அளித்த அதே பதிலைத்தான் 2 ஆண்டுகள் கழிந்தும் எழுத்து மாறாமல் தற்போது திமுக ஆட்சிகாலத்திலும் அளித்துள்ளனர் நிதித்துறை சார்புச் செயலாளர்கள்.

ஆக, சொன்ன சொல் தவறமாட்டான் இந்த கோட்டைச்சாமி என்ற ஜெய்ஹிந்த் பட Modulation-ல் தற்போது வெளிவந்துள்ள நிதித்துறையின் பதிலை வைத்துக் கொண்டுதான், KGF 2-விற்கே டஃப் கொடுக்குமளவு ஆளாளாக்கு பில்டப் கொடுத்து சமூக, செய்தி & மின் ஊடகங்களில் நமது ஓய்வூதியம் குறித்துப் படங்காட்டப்பட்டு வருகிறது மக்களே! ஒரு மின் ஊடகத்தில் வல்லுநர் குழுவையே ஸ்டாலின் தான் அமச்சாருன்னு அடிச்சுவுட்ருக்காக!!

இவற்றையெல்லாம் நம்புவதென்பது. . . நிலாவுல பாட்டி நெல்லுக்குத்தி மாவரச்சு வடைசுடுது என்பதைப் போன்றதே!

Actually. . . ரீல் அந்து 3 வருஷமாச்சு!!

அப்ப, திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கைல சொன்னத முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற மாட்டாரா? என்றால். . .

PFRDA-வில் ஒப்பந்தமிட்டு NPS-ஐ நடைமுறைப்படுத்தி வரும் சட்டீஸ்கர் & இராஜஸ்தான் அரசுகள் வல்லுநர் குழுவே போடாம நேராடியாக அதை இரத்து செய்துள்ள போது. . . ஒப்பந்தமே போடாத தமிழ்நாட்டு அரசால் CPS-ஐ இரத்து செய்வதும் சாத்தியமே!

ஆனால். . . அதைச் சாத்தியப்படுத்தத் தேவையான அழுத்தம், சத்தியமாக ஆசிரிய & அரசு ஊழியர்கள் திரளாகச் சங்கமித்து சந்தியில் நின்று எழுப்பக்கூடிய சத்தத்தின் வழி மட்டுமே வாய்க்கும்.

அதெல்லாம் தேவையேயில்ல. . . அவராவே செய்வாரு என்றால். . .

உயர் கல்வித் தகுதிக்கு அண்ணாவைப் போல மீண்டும் Incentive தருவேன் என வாக்குறுதி அளித்தவர். . . ஒன்றிய அரசைப் பின்பற்றி One Time Settlement மட்டுமே தருவேன் என்று ஆணையிட்டு, அவரின் வாக்குறுதியை அவரே மறந்ததை & மறுத்ததை உங்களின் நினைவிற்குள் இட்டு இப்பதிவை முடித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews