மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 08, 2021

Comments:0

மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் ஏராளமாக உள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றி நடைமுறையில் பள்ளிகளை செயல்படுத்த முடியுமா என்பது சாத்தியமில்லாத செயல்பாடாக தான் இருக்கிறது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமரச் செய்ய வேண்டும். போதிய இடைவெளி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய வகுப்பில் ஒட்டுமொத்தமாக 500 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 500 மாணவர்களை வகுப்பிற்கு 20 வீதம் பிரித்தால் 25 வகுப்பறைகள் தேவைப்படும். எத்தனை அரசு பள்ளிக்கூடங்களில் 25 வகுப்பறையில் மாணவர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கிறது என தெரியவில்லை. இந்த குறைபாட்டை போக்க தானே 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களை சுழற்சிமுறையில் வரச் செய்கிறோம் என சொல்வார்கள். ஒன்பது அல்லது பதினோராம் வகுப்பு சுழற்சி முறையில் வர செய்தாலும்கூட குறைந்தபட்சம் 15 வகுப்பறைகள் தேவைப்படக்கூடிய சூழலில் தான் பல பள்ளிகள் நிலைமை இருக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடிய பள்ளிகளில் இது பற்றி சொல்லவே தேவையில்லை. வகுப்பறைகளை எப்படியோ சமாளித்தால் கூட அந்த வகுப்பிற்கு செல்லக்கூடிய ஆசிரியர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரே வகுப்பினை பல பிரிவுகளாக பிரித்து இருப்பதால் அனைத்து பிரிவுகளுக்கும் பாடம் நடத்த முடியாத சூழ்நிலையில் ஆசிரியர்களின் நிலை இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆறு பாடவேளைகள் பள்ளி செயல்படும் சூழலில் ஆறு பாட வேலைகளிலும் தொடர்ந்து பாடம் நடத்தக்கூடிய நிலையில் பெரும்பாலான ஆசிரியர்களும் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதுதான் எதார்த்தமான நிலை. தொடர்ந்து ஆறு பாடவேளை பாடம் நடத்தினால் கூட ஒரு சில வகுப்பிற்கு செல்ல முடியாத சூழலும் பல பள்ளிகளில் இருக்கிறது. பேருந்துகளில் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 3 பேர் மிக நெருக்கமாக அமர்ந்து தான் பயணிக்கிறார்கள். இருக்கையில் அமர்வது மட்டும் அல்லாமல் அதிகப்படியான பயணிகள் நின்று கொண்டும் பயணம் செய்கிறார்கள். 50 நபர்கள் செல்ல வேண்டிய பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் பயணிப்பதை கண் முன்னே கண்டு வருகிறோம். அந்தக் கூட்டத்தில் பயணித்து பள்ளிக்கும் வரக்கூடிய மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் தனித்தனியாக இருக்கும் படியாக பார்த்துக்கொள்ள அரசு கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. அதன்படி ஒரு வகுப்பிற்கு 20 நபர்களை தான் அமர செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதால் அதனை நடைமுறைப்படுத்துவது மிகுந்த சிரமத்தையும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தும் சூழலை உண்டாக்குகிறது. பள்ளிகளை பார்வையிட வரும் கல்வித்துறை மற்றும் பிற துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளியை தூய்மையாக வைக்க வில்லையா என எளிதில் கேட்டுவிட்டு குறை சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். பள்ளிகளை தூய்மையாக வைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.

அந்த தூய்மைப் பணியை செய்வது யார்? என்று தான் தெரியவில்லை.

எத்தனை பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். நியமனம் செய்யப்பட்டுள்ள ஒரு சில தூய்மை பணியாளர்களும் தங்களுடைய பணியினை சரியாகச் செய்கிறார்களா? என்று அவர்களால் கேள்வி கேட்க முடியவில்லை. பள்ளிகளின் எதார்த்தமான நிலை இப்படி இருக்க பள்ளிக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் இருக்கக்கூடிய ஆசிரியர்களை வாய்க்கு வந்தபடி பேசுவது மிகுந்த கண்டனத்துக்குரிய செயலாக இருக்கிறது. வகுப்பறையை சுத்தம் செய்வது ஆசிரியர்களின் வேலை என்று சற்றும் யோசிக்காமல் சொல்லிவிடுகிறார்கள். வகுப்பறையை சுத்தம் செய்யும்போது நாம் உடனிருந்து மேற்பார்வை செய்ய முடியுமே தவிர, நாமே நேரடியாக துடைப்பத்தை கையில் எடுத்து கூட்ட முடியாது என்பதனை அவர்கள் உணர்வதில்லை. எத்தனை அரசு அலுவலகங்களில் அல்லது கல்வித்துறை அலுவலகங்களில் சுத்தம் செய்யும் வேலையை அங்கு பணிபுரியும் அதிகாரிகள் செய்கிறார்கள் என தெரியவில்லை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் தூய்மை பணி செய்வதற்கு அதற்கென தனியாக ஆட்களை வைத்திருக்கும் சூழலில் பள்ளிகளை மட்டும் ஏன் ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என இவர்கள் ஆணை இடுகிறார்கள் என தெரியவில்லை. பல கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகளும் பள்ளிக்கு பார்வையிட வரும்போது ஆசிரியர்களை மிகவும் இழிவாகவும், ஒருமையிலும் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கற்பிக்கப்படும் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் கேவலமாக உள்ளது தான் எதார்த்த நிலை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews