இயற்பியல், வேதியியல் வினாக்கள் மிகவும் கஷ்டம்: நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு? கல்வி வல்லுனர்கள் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 13, 2021

Comments:0

இயற்பியல், வேதியியல் வினாக்கள் மிகவும் கஷ்டம்: நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு? கல்வி வல்லுனர்கள் தகவல்

நேற்று நடந்த நீட் தேர்வில், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் கஷ்டமாக இருந்ததால், இந்தாண்டுக்கான நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வி வல்லுனர்கள் தெரிவித்தனர்.


நாடு முழுவதும் 202 நகரங்களில் உள்ள 3,800 மையங்களில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) நேற்று நடைபெற்றது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் தேர்வை எதிர்கொண்டனர்.


கடந்த முறையை விட பத்து சதவீதம் அதிகமாகும். தேர்வு மையங்களில் மாணவர்கள் நடத்தப்பட்ட விதங்கள் பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது.


முழுக்கை சட்டைகள் மற்றும் நகைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. சில மையங்களில் முழுக்கை சட்டை அணிந்து வந்தவர்களின் சட்டைகள் கழற்றப்பட்டு அவை அரைக் கை சட்டையாக்கப்பட்டன.


சில மையங்களில் தந்தையும் மகனும் சட்டைகளை மாற்றிக் கொண்டனர். கொரோனா கட்டுபாடுகளுக்கு மத்தியில், ஒருவழியாக இந்தாண்டுக்கான நீட் தேர்வு முடிந்தது. ஆனால், வினாத்தாளில் இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடுமையாக இருந்துள்ளது. பெரும்பாலான கேள்விகள் கஷ்டமானதாக இருந்துள்ளன. வேதியியல் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஓரளவு கடினமாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுடன் ஒப்பிடும் போது, உயிரியல் பாட கேள்விகள் எளிதாக இருந்துள்ளது.


கேள்விகளைப் புரிந்துகொள்ள நீண்ட நேரம் பிடித்ததாக தேர்வர்கள் கூறினர். இதனால், கடந்தாண்டை ஒப்பிடும் போது, இந்தாண்டு வினாத்தாள் கடுமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.


இதுகுறித்து கல்வி வல்லுனர்கள் கூறுகையில், ‘இயற்பியல் பாட கேள்விகள் மிகவும் கஷ்டமானதாக இருந்தன. இயற்பியலில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில் 42 கேள்விகள் கஷ்டமானவை.


கிட்டத்தட்ட எல்லா கேள்விகளும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டன.


உயிரியல் பாடங்களுக்கு முதலில் பதிலளித்தால் நேரம் கொஞ்சம் மிச்சமாகி இருக்கும். இயற்பியலில் பதிலை தொடங்கி இருந்திருந்தால், தேர்வர்களுக்கு அதிக நேரம் எடுத்திருக்கும். தாவரவியலில் கேள்விகள் எளிதானதாக இருந்தன. ஆனால் விரைவாக பதிலளிக்க முடியாது. வினாத்தாள் கடினமாக இருந்ததால், ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews