கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது; நீட் வினாத்தாளின் விலை எவ்வளவு தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 14, 2021

Comments:0

கசிந்தது நீட் வினாத்தாள்: 8 பேர் கைது; நீட் வினாத்தாளின் விலை எவ்வளவு தெரியுமா?

"ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீட் வினாத்தாளை இளைஞர் ஒருவர், தனது செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து, அதனை சிகரைச் சேர்ந்த இருவருக்கு அனுப்பிய விவகாரத்தில் நீட் தேர்வு மையத்திலிருந்து ஒரு பெண் உள்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. கரோனா இரண்டாம் அலையின் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 202 நகரங்களில் கடந்த ஞாயிறு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வின் வினாத்தாள் கசியவிடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினர் 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை குறித்து ஜெய்ப்பூர் காவல்துறை துணை ஆணையர் ரிச்சா தோமர் கூறுகையில், ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையம் நீட் தேர்வுமையமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாளை கசியவிட்டு முறைகேடு நடைபெற்றதாக தகவல் கிடைத்தது.


இதில், வினாத்தாளை கசியவிட்ட நபர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


வினாத்தாளை கசியவிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் ராம் சிங் கூறியிருப்பதாவது, தனக்கு நன்கு அறிமுகமான நவரத்னா என்பவர் பன்சூரில் கல்வி மையம் நடத்தி வருகிறார். அவருடைய நண்பர் அனில் யாதவ் இ-மித்ரா நடத்தி வருகிறார். அவரது அண்டை வீட்டைச் சேர்ந்த சுனில் யாதவின் உறவினர்தான் தனேஷ்வரி. தனேஷ்வரியின் நீட் தேர்வு மையம் ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மையமாகும்.


இதனால், எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டோம். நீட் வினாத்தாளை ரூ.35 லட்சத்துக்கு விற்பது என்று முடிவெடுத்தோம். அதன்படி, வினாத்தாள் தேர்வு மையத்துக்கு வந்ததும் அதனை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து விற்பனை செய்வது என்பதே எங்கள் திட்டம். இதற்காக, ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்துடன் தனேஷ்வரியின் உறவினர் தேர்வு மையத்துக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தார். பிறகு காவலர்களால் அவரும் கைது செய்யப்பட்டார். பங்கஜ் யாதவ் மற்றும் சந்தீப் ஆகியோர் வினாத்தாளைப் பெற்று உடனடியாக அதற்கான விடைகளை எழுதி ராம் சிங்கிடம் கொடுத்துள்ளனர். அது கல்லூரியின் நிர்வாகி முகேஷ் சமோடாவிடம் வழங்கப்பட்டது. அதனை அவர் சமோடா தனேஷ்வரிக்கு கொடுத்துள்ளார். விசாரணையில், தனேஷ்வரியிடமிருந்து வினா மற்றும் விடைத்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் அசல்கள் ராம் சிங்கிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதற்கிடையே, ராம் சிங் மற்றும் முகேஷ் சமோடா ஆகியோர் வினாத்தாளை பங்கஜுக்கு செல்லிடப்பேசியில் அனுப்பியுள்ளனர். இந்த வினாத்தாளை, பங்கஜ் யாதவ் சிகரில் உள்ள சுனில் ரின்வான் மற்றும் தினேஷ் பெனிவால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். உடனடியாக அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வினாத்தாளை அனுப்பி, விடைகளைத் தேர்வு செய்து அவர்கள் மூலம் நீட் வினாத்தாள் ஜெய்ப்பூர் மற்றும் சிகர் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கசியவிடப்பட்டுள்ளது.


இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிகருக்கு விரைந்து சென்று சுனில் மற்றும் தினேஷை கைது செய்துள்ளனர்."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews