பள்ளி மாற விரும்பும் மாணவர்களுக்கு ஏழு நாளில் டிசி வழங்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 08, 2021

Comments:0

பள்ளி மாற விரும்பும் மாணவர்களுக்கு ஏழு நாளில் டிசி வழங்க உத்தரவு

'வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்கள், ஏற்கனவே படித்த பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்; அதை, ஒரு வாரத்தில் பள்ளி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஊரடங்கு நிலைஐக்கிய மாவட்ட சுயநிதி பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பிரின்ஸ் பாபு ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தில் இருந்து தான், ஆசிரியர்கள், ஊழியர்கள் சம்பளம் மற்றும் பள்ளி நிர்வாகச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எத்தனை மாணவர்கள்பள்ளியில் படிக்கப் போகின்றனர்; எத்தனை பேர் விலகப் போகின்றனர் என்பது, பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வேண்டும். அதற்கேற்றாற்போல, பள்ளிக்கான செலவுகளை திட்டமிட முடியும்.எனவே, ஏற்கனவே படித்த பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் பெறாமல், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பி.எபெனேசர் பால் ஆஜராகி, ''ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளியில் மாணவர்கள் சேருவதற்காக உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் நலன் காக்கும் பெயரில், தனியார் பள்ளிகளை நிர்கதியாக விடக்கூடாது,'' என்றார்.அரசு தரப்பில், வழக்கறிஞர் செல்வேந்திரன் ஆஜராகி, ''இக்கட்டான நேரத்தில், மாணவர்களின் கல்வியில் இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக, மாற்றுச் சான்றிதழ் கட்டாயம் என்பதை கல்வித் துறை தளர்த்தி உள்ளது,'' என்றார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:சாதாரணமாக பள்ளிகள் இயங்கும் கால கட்டத்தில், மாணவர்கள் ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளிக்கு மாறும் போது, சம்பந்தப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

தற்போது, அரசு அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்கிறது. கொரோனா தாக்கத்தை சமாளிக்க, ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்பட்டது.எனவே, வகுப்புகள் நடத்துவதில், கல்விக் கட்டணம் செலுத்துவதில், மாணவர்களின் பள்ளி மாற்றத்தில், அரசு தளர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால், வேறு பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர் மாற்றுகின்றனர். தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறுகின்றனர்.புகார் தெரிவிக்கலாம்மாணவர்களின் பள்ளி மாற்றம், விதிமுறைகளுக்கு உட்பட்டது தான்; ஆனால், அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, ஒட்டுமொத்த மாணவர்களின் நலன் கருதி, கொள்கை முடிவுகளை அரசு எடுக்கிறது. அரசு எடுக்கும் எல்லா முடிவு களிலும், நீதிமன்றம்குறுக்கிட முடியாது.மாணவர்களின் நலன் முக்கியம் போன்று, தனியார் பள்ளிகளின் நலனையும் பாதுகாக்கவில்லை என்றால், அதுவும் மாணவர்களின் கல்வியை பாதிக்கும். தனியார் பள்ளிகளையும் நிர்கதியாக விட்டு விட முடியாது. தற்போதைய சூழலில், தனியார் பள்ளிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பள்ளியில் கல்வியை தொடர்வதா அல்லது வேறு பள்ளிக்கு மாறுவதா என்பது குறித்து முடிவெடுக்க, பெற்றோர், மாணவருக்கு முழு சுதந்திரம் உள்ளது வேறு பள்ளியில் படிக்க ஒரு மாணவர் விரும்பினால், ஏற்கனவே படித்த பள்ளியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெற்ற ஒரு வாரத்துக்குள், அந்த மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும் பெற்றோர் மற்றும் பள்ளிக்கு இடையே, கல்விக் கட்டணம் உள்ளிட்ட எந்த பிரச்னை இருந்தாலும், அதை காரணம் காட்டி, மாற்றுச் சான்றிதழ் வழங்குவதை மறுக்கக் கூடாது. பிரச்னையை சட்டப்படி தனியாக தீர்த்துக் கொள்ளலாம் மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளி மறுத்தால், முதன்மை கல்வி அதிகாரிக்கு புகார் தெரிவிக்கலாம். அவர் உடனடி நடவடிக்கை எடுத்து, மாணவருக்கு மாற்றுச் சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் விதிமீறல் ஏதாவது நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் தற்போதைய சூழ்நிலையை கருதி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு குறித்து, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கையை, பள்ளி கல்வி கமிஷனர் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews