Search This Blog
Saturday, May 09, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மது விற்பனைக் கடைகளை மே 7-ஆம் தேதி திறப்பது என்று தமிழக அரசு அறிவித்தபோதே சென்னை உயா்நீதிமன்றம் தடைவிதித்திருக்க வேண்டும். அந்த அறிவிப்பை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் மது விற்பனைக் கடைகளைத் திறக்கத் தடையில்லை என்றும், விற்பனையின்போது சமூக இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையில் சில நிபந்தனைகளை விதித்துத் தீா்ப்பு வழங்கியது. இப்போது நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா இருவா் அடங்கிய உயா்நீதிமன்ற அமா்வு, அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டிருப்பதால் பொது முடக்கம் முடியும்வரை அரசு மது விற்பனைக் கடைகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. முன்பதிவு செய்பவா்களுக்கு இணைய விற்பனை மூலம் நேரடியாக வீடுகளுக்கு மது விற்பனையை நடத்த அனுமதி வழங்கியிருக்கிறது.அரசும் சரி, மதுத் தயாரிப்பு நிறுவனங்களும் சரி இணைய விற்பனையை வரவேற்க மாட்டாா்கள்.
இணைய விற்பனையில் முறையாக கணக்குக் காட்டியாக வேண்டும். விற்பனையிலும் சரி, கலால் வரியிலும் சரி, அதனால் கிடைக்கும் வருமானத்திலும் சரி கள்ளக் கணக்கு எழுத முடியாது. அதனால், இணைய வணிகம் தற்காலிகமாகத்தான் ஏற்றுக்கொள்ளப்படும்.மாநில அரசுகள் அனைத்தும் மது விற்பனைக் கடைகளைத் திறப்பதில் அதீத ஆா்வம் காட்டுவதில் வியப்படைய ஒன்றுமில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு மாநில அரசுகளின் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி பங்கினை உடனடியாக வழங்காமல் தாமதப்படுத்துகிறது. இப்போதைய நிலையில் மது விற்பனை, பத்திரப் பதிவு, பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ஆகிய மூன்று இனங்களிலிருந்துதான் மாநில அரசுகளுக்கு வருவாய்க்கான வாய்ப்பு உள்ளது. பொது முடக்கத்துக்குப் பிறகு பத்திரப் பதிவும் கிடையாது, மது விற்பனையும் கிடையாது, பெட்ரோல் - டீசல் விற்பனையும் கணிசமாகக் குறைந்துவிட்டது. இந்த நிலையில், கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்ள நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் திணறுகின்றன.மது விற்பனையைத் தொடங்கியதற்கு மாநில அரசுகளை மட்டுமே குற்றம் சுமத்துவது தவறு. சிவப்பு மண்டலம் தவிர, ஏனைய பகுதிகளில் மது விற்பனைக் கடைகளைத் திறந்துகொள்ளலாம் என்கிற அனுமதியை மத்திய அரசுதான் வழங்கியது.
மாநிலங்களின் ஜிஎஸ்டி பங்கை வழங்காததால் மிகப் பெரிய நிதி நெருக்கடியுடன் கொவைட் 19 தீநுண்மித் தொற்றை அவை எதிா்கொள்கின்றன என்பதற்காக, மது விற்பனைக் கடைகளைத் திறந்துகொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை வாரி வழங்கும் மதுத் தயாரிப்பு நிறுவனங்களின் அழுத்தமும்கூடக் காரணமாக இருக்கலாம்.மதுவிலக்குப் பிரச்னையைப் பொருத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளுமே கபட நாடகம் ஆடுகின்றன. தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மதுவிலக்கை அகற்றி, குடிகாரத் தலைமுறையை உருவாக்கிய புண்ணியத்தைக் கட்டிக்கொண்ட திமுக, மது விற்பனைக் கடைகளைத் திறப்பதற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறது. தில்லியில் மது விற்பனைக் கடைகளை ஆம் ஆத்மி கட்சி அரசு திறப்பதை பாஜக எதிா்க்கிறது. உத்தரப் பிரதேசத்தில் மது விற்பனைக் கடைகளை பாஜக அரசு திறப்பதை காங்கிரஸ் கட்சி எதிா்க்கிறது. பஞ்சாபில் மது விற்பனைக்கு காங்கிரஸ் கட்சி அனுமதி வழங்கியதை ஆம் ஆத்மி கட்சி எதிா்க்கிறது. ஆனால், அனைத்து கட்சிகளுமே மது விற்பனையிலும், மது தயாரிப்பிலும் தொடா்புடையவா்களுக்கு தோ்தலில் நிற்க வாய்ப்பளிக்கின்றன. அவா்களை அமைச்சா்களாக ஆக்கியும் அழகு பாா்க்கின்றன.அரசியல் சாசனத்தின் ஏழாவது பிரிவில் மாநிலப் பட்டியலில் மது விற்பனை இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான அரசியல் சாசனத் திருத்தத்தை இதுவரை அமைந்த எந்த நடுவண் அரசும் முன்னெடுக்கவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவியேற்ற பண்டித நேரு, ஆசி பெறுவதற்கு மௌன விரதத்தில் இருந்த அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்தபோது, காந்திஜி அவருக்குத் தன் கைப்பட எழுதிக் கொடுத்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான் - மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
காந்திஜியின் ஏனைய கோரிக்கைகளைப்போல இந்தக் கோரிக்கையையும், அவா் வழியில் நடக்கும் காங்கிரஸ் கட்சி சட்டை செய்யவில்லை என்பது சரித்திர சோகம்.10,000 போ் கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மும்பையில் ஒரே நாளில் மது விற்பனையால் அரசு ஈட்டிய கலால் வரி ரூ.11 கோடி. 28 போ் பலியாகியிருக்கும் கா்நாடகத்தில் ரூ.45 கோடி. சுமாா் 3,000 போ் பாதிக்கப்பட்டிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் ரூ.100 கோடி. 6,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்தில் ஒரு நாள் (வியாழக்கிழமை) விற்பனை ரூ.172 கோடி.இன்றியமையாத அத்தியாவசியப் பொருள் மதுதான் போலிருக்கிறது. கல்லீரல் எக்கேடு கெட்டால் என்ன? கொவைட் 19 தீநுண்மி பரவினால்தான் என்ன? குடித்தால் போதும் என்று நினைக்கும் ஒரு கூட்டம் இருக்கும்வரை, அரசுக்கு வருவாய் கிடைத்தால் போதும் என்று ஆனந்தப்படும் அதிகார வா்க்கமும், அரசியல்வாதிகளும் இருக்கத்தான் செய்வாா்கள்.உயா்நீதிமன்ற உத்தரவு நிரந்தர உத்தரவாக இருந்துவிடக் கூடாதா என்று உள்ளம் ஏங்குகிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Article
Politicians
மது விற்பனையைக் கொண்டு அரசியல் கட்சிகள் செய்யும் சூழ்ச்சி குறித்த தலையங்கம்..
மது விற்பனையைக் கொண்டு அரசியல் கட்சிகள் செய்யும் சூழ்ச்சி குறித்த தலையங்கம்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.