எள் என்பதற்குள் எண்ணெயாக மாறும் ஆர்வக்கோளாறு ஆசிரியர் பெருமக்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 06, 2019

2 Comments

எள் என்பதற்குள் எண்ணெயாக மாறும் ஆர்வக்கோளாறு ஆசிரியர் பெருமக்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மறைந்த முன்னாள் முதல்வர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றிலிருந்து தொடங்கியது "பிரேக்கிங் நியூஸ்" மேனியா. அந்த பின்னணி இசையைக் கேட்டாலே வயிற்றில் புளியைக் கரைத்து உடம்பு படப்படப்பாகிவிடும். நல்லவேளையாக தொலைக்காட்சி சானல்களில் தற்காலிகமாக அதற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு இருக்கிறார்கள். ஆனால் கல்வித்துறையில் இந்த "பிரேக்கிங் நியூஸ் " மேனியாவுக்கு முடிவே இல்லை. இந்த "மேனியா" இப்போது பல தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு "போபியாவாக" மாறி விட்டது. வாட்ஸ்அப் பார்த்தாலே ஆசிரியர்கள் கர்ப்பிணி பெண்கள் போல வயிற்றுப் பிரட்டல், வாந்தி,தலைச்சுற்றல் போன்ற பல உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். வாட்ஸ்அப்பில் பிரேக்கிங் நியூஸ் ஒன்றும் இல்லாவிட்டால் அதை விட கொடுமை. வித்ட்ராயல் சிம்டம் போல கைகால்கள் உதற தொடங்கி விடுகின்றன.
இந்த பரப்பரப்பை உருவாக்குவதில் கல்வி அதிகாரிகள் பங்கு மிகக்குறைவு . ஆசிரியர்களின் பல்ஸ் ரேட்டை எகிற வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மகான்கள் வேறு யாருமல்ல. நம் ஆசிரியர் இனம் தான். அவர்கள் ஆர்வக்கோளாறுக்கு ஒரு எல்லையே இல்லை. 'கல்வி', 'ஆசிரியர்', 'பள்ளி' இந்த மூன்றில் ஏதாவது ஒரு வார்த்தை வருகிற மாதிரி வாட்ஸ்அப் குழுவோ, வலைப்பூவோ அல்லது இணையதளமோ வைத்துக் கொண்டு இவர்கள் ஆர்வக்கோளாறில் செய்யும் அட்ராசிட்டிக்கு ஆசிரியர்கள் அதகளம் ஆகின்றனர். கல்வித்துறைக்கு என்று ஒரு நிர்வாக படிநிலை உள்ளது. கல்வித்துறை முதன்மை செயலாளர், இயக்குநர், இணை இயக்குநர், முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் கடைசியில் ஆசிரியர். அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் திட்ட இயக்குநர், முதன்மைக்கல்வி அலுவலர் ,உதவி திட்ட அலுவலர் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ,ஆசிரியர் பயிற்றுநர்கள் . ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இயக்குநர்,முதல்வர், விரிவுரையாளர். மேற்கூறிய படிநிலைகளில் வரிசைக்கிரமமாக உத்தரவுகள் கீழிறங்கி கடைசியில் ஆசிரியர்களிடம் வருவது தான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது ஒரு அரசாணையோ உத்தரவோ பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் முன்னரே கடைகோடி கிராமத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரை தகவல் கிடைத்தும் விடுகிறது. எல்லாம் நம் ஆர்வக்கோளாறு ஆசிரியர்கள் உபயம் தான்.
இவர்களின் இம்சைக்கு சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்
#EMIS பதிவேற்றம்:
எமிஸ் என்பது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பற்றிய விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி. இது சில ஆண்டுகளுக்கு முன் துவங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது . புதுப்புது இணைய பக்கங்கள் தினந்தோறும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி எதிர்காலத்திலும் தொடரும். ஒரு நாளோடு முடியப்போவதில்லை . அது ஒரு தொடர்பணி .அப்படி இருக்கையில் "இதோ புதிய வெர்ஷன் வெளியாகி விட்டது ", "நாளை இரவு 12 மணிக்குள் பதிவேற்றம் செய்தாகவேண்டும்" இல்லையென்றால் இணையதளம் மூடப்பட்டு விடும்" போன்ற அச்சுறுத்தல்கள் அதிபயங்கரம். விக்ரமாதித்தன் வேதாளம் கதையைப்போல எமிஸ் பதிவேற்றம் செய்யாவிட்டால் தலை சுக்குநூறாக வெடித்து சிதறிவிடும் என்று பிரேக்கிங் நியூஸ் போடாதது தான் பாக்கி.
# பயோமெட்ரிக் வருகைப்பதிவு:
புலி வருது பூதம் வருது என்று குழந்தைகளை அச்சுறுத்துவது போல ஒரு வருடமாக இவர்கள் கொடுக்கும் அப்டேட்டுக்கு அளவேயில்லை. வீடியோ வழிகாட்டல் பவர்பாயின்ட் பிரசன்டேஷன் என்று கலக்குகிறார்கள். அரசே யோசிக்காத பல ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.இவர்களின் ஆர்வக்கோளாறால் லாபமடைந்தது பயோமெட்ரிக் கருவி ஒப்பந்தம் செய்த கம்பெனிக்காரர்கள் தான். பயோமெட்ரிக் கருவியை பள்ளிகளுக்கு நேரே சென்று நிறுவி பயிற்சி அளிப்பதற்கென பெரும் தொகையை அரசு அவர்களுக்கு அளித்திருக்கிறது. அது வரை இவர்களுக்கு பொறுளமை கிடையாது. பயோமெட்ரிக் வரும்போது வரட்டும் அது வரை நாம் கற்பித்தல் பணியை பார்ப்போம் என்று இருப்பது கிடையாது. மற்ற அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவி பொருத்தும் வரை அமைதியாக இருந்தனர். பொருத்திய பிறகு சந்தேகம் இருந்தால் தெளிவு படுத்திக் கொண்டனர். ஆசிரியர்கள் போல யாரும் பதற்றமடையவில்லை.
# சாலா சித்தி:
என்ன இப்போ? பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்யறாங்க. அவ்வளவு தான். தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுவார்கள் திருத்திக்கொள்ளப்போகிறோம். யாருக்கும் தண்டனை வழங்கப்போவதில்லை . ஏன் இவ்வளவு கூச்சல் குழப்பம்?
# நிஷ்டா பயிற்சி:
இன்னும் கல்வி அலுவலர்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட இதுகுறித்து வரவில்லை. அதற்குள் நம் மக்கள் பயிற்சியையே முடித்து விட்டனர். ஆப் டவுன்லோடு பண்ணுங்க. செல் எடுத்துட்டு போங்க . ஏன்? ஏன்? இவ்வளவு அவசரம்? பயிற்சி வரும்போது வரட்டும். கலந்துக் கொள்வோம். மேலே சொன்னது சில உதாரணங்கள் தான். முடியல.
*ஆசிரியர்களுக்கு ஆன்ட்ராய்டு அலைபேசி அரசு இன்னும் வழங்கவில்லை
*இணைய தொடர்பு எல்லா கிராமங்களுக்கும் எட்டவில்லை.
*ஆசிரியர்கள் அனைவரும் கணிணி அறிவு பெற்றவர்கள் இல்லை.
* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எழுத்தர் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் கிடையாது.
இதெல்லாம் தெரிந்து தான் கல்வித்துறை இது போன்ற பதிவேற்றம் செய்யும் செயல்களில் சுணக்கம் ஏற்பட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை .எடுக்கவும் முடியாது. மேலே சொன்ன ஆன்லைன் பணிகளுக்கும் வகுப்பறை கற்பித்தலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? நம்முடைய பணி கற்பித்தல். "கற்பித்தல் மட்டுமே " நம் மாணவர்கள் அதை எதிர்பார்த்து தான் நம்மிடம் வருகிறார்கள். அவர்களை ஏமாற்றாமல் பாடம் நடத்துவோம்.
ஆசிரியர் இணையதளங்கள், வலைப்பூக்கள், வாட்ஸ்அப் குழுக்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு பணிவான வேண்டுகோள். உங்கள் உழைப்பு அளப்பரியது. ஆசிரியர்கள் அப்டேட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுகிறீர்கள். சிறப்பு. ஆசிரியர்களுக்கு செய்திகளை விரைந்து தர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது மிகச்சிறப்பு. கற்பித்தலில் சிறந்த உத்திகள் ,ஆசிரியர்களின் சாதனைகள், மாணவர்களின் திறன் வெளிப்பாடுகள் போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உபயோகமான அரசாணைகள் ,அறிவிப்புகள் இருந்தால் பகிருங்கள். ஆன்லைன் பதிவேற்றம், பயிற்சிகள் , போட்டிகள் போன்ற தகவல்களை தவிருங்கள். அவை உரிய வழியாக வந்து சேரட்டும். அதற்கு தான் அலுவலர்கள் இருக்கிறார்கள். அது வரை பொறுமையாக இருங்கள். இருக்க விடுங்கள். ஆசிரியர்கள் பதற்றாமாகவும் பரபரப்பாகவுமே இருந்தால் வகுப்பறை கற்பித்தலில் மற்றும் கற்பித்தல் முன்தயாரிப்பு பணிகளில் முழுமனதாக ஈடுபடமுடியாது என்பது நீங்கள் அறியாதது கிடையாது. அரசுப்பள்ளி ஆசிரியர்களை கல்வி தவிர்த்து மற்ற செயல்களில் ஈடுபடுத்தி கல்வியை அழிக்க நினைப்பவர்களுக்கு உங்களை அறியாமலே நீங்கள் துணை போகிறீர்கள் .அதை உணர்ந்து இப்போதாவது நிறுத்திக்கொள்வதே நீங்கள் கல்விக்காக ஆற்றும் தலையாய கடமையாகும். மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தாராளமாக என்னுடன் விவாதிக்கலாம்.. நாகை பாலா 06.10.2019 9442724876 kmasnagai@gmail.com
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. மிகவும் சரி.. Update ஆவதில் தவறில்லை ஆனால்... சிலர் கற்பித்தல் பணிகளை விட இதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.. இதனால் பாதிக்கப்படப் போவது நம் மாணவர்கள் தான் ...

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews