பெண் குழந்தைகள் சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக சுகன்யா சம்ரிதி யோஜனா 2015ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுநாள் வரையில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,000 இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியை இப்போது ஒன்றிய அரசு திருத்தியுள்ளது. இதன்படி இனிமேல் ரூ.250 மட்டும் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக இருந்தால் போதுமானது. அதிகளவில் பெண் குழந்தைகளை இந்தத் திட்டத்தில் இணைக்கும் விதமாக ஒன்றிய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 14 வருடங்களுக்கு மட்டுமே பணத்தைச் செலுத்த இயலும். அதன்பிறகு யாருடைய பெயரில் இந்தக் கணக்குத் தொடங்கப்பட்டதோ அவருக்கே நேரடியாக வைப்புத் தொகை வழங்கப்படும். மற்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டியே இத்திட்டத்துக்கும் வழங்கப்படுகிறது. ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டில் இந்தக் கணக்குகளுக்கு 8.1 விழுக்காடு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் இந்தத் திட்டம் குறித்துப் பேசிய அருண் ஜேட்லி, “நவம்பர் 2017 வரையில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின்கீழ் 1.26 கோடிக் கணக்குகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. இதில் ரூ.19,183 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது” என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.