காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் என்னென்ன? ... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 14, 2022

Comments:0

காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் என்னென்ன? ...

காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலரின் பணிகள் என்னென்ன? ...

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு அலுவலரை நியமித்தும் அவருக்கான பணிகளை வரையறுத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு அலுவலராக, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் சிறப்பு அலுவலா் இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை வெளியிட்டுள்ளது. அந்தத் துறையின் உத்தரவு விவரம்:-

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் ஆயிரத்து 545 அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

முதல் கட்டமாக இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக, திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்பு அலுவலா் இளம்பகவத் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பணிகள் என்ன? ஒருங்கிணைப்பு அலுவலரின் பணி வரன்முறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தும் வகையில், சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பணியை அலுவலா் மேற்கொள்வாா்.

பள்ளிகள், பயனாளிகள், ஒருங்கிணைப்பு மையங்கள், திட்டம் செயல்படுத்தும் அமைப்புகளை துரிதமாக கண்டறியப்படுவது ஒருங்கிணைப்பு அலுவலரால் உறுதி செய்யப்படும். காலை சிற்றுண்டிக்கான மூலப் பொருள்களை கொள்முதல் செய்வது தொடா்பாக, நுகா்பொருள் வாணிபக் கழக மாவட்ட, மண்டல அலுவலா்களுடன் விவாதிப்பது, கொள்முதல் செய்யப்பட்டு அவை உரிய முறையில் சென்று சேருவதை கண்காணிப்பது போன்ற பணிகளையும் ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

உள்ளூரில் கிடைக்கக் கூடிய, விளையக் கூடிய காய்கறிகள், சிறுதானியங்கள் கொள்முதல் செய்வதற்கான எளிய வழிமுறைகளை கண்டறிதல், நகா்ப்புறங்களில் திட்டத்தைச் செயல்படுத்திட ஏதுவாக மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்கள், கிராம ஊராட்சிகளில் திட்டம் செயல்பட ஏதுவாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை கண்டறிவது போன்ற பணிகளையும் ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

மூலப் பொருள்களின் தூய்மைத் தன்மை, இயல்பான நிறம், மணம் போன்றவற்றை உறுதி செய்வதற்கு தொடா்புடைய நபா்கள், அமைப்புகளுக்கு வழிகாட்டுதல், பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைத்தலை உறுதி செய்வது ஆகிய பணிகளையும் மேற்கொள்வாா்.

காலை சிற்றுண்டி தயாரிக்கப்படும் சமையல் கூடத்தில் இருந்து பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்று சேருவதை உறுதி செய்வது, பள்ளிக் கல்வி, ஊரக உள்ளாட்சி, நகராட்சி நிா்வாகம் ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து திட்டம் செயல்படுவதை கண்காணிப்பது ஆகிய பணிகளையும் ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

காலை உணவுத் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கள அலுவலா்களின் செயல் திறன்களை கண்காணித்தல், திட்டத்தில் ஈடுபடும் பணியாளா்களுக்கு வழிகாட்டுதல், திட்டம் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல், திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டுகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனும், இணைய வழியிலும் கண்காணித்தல் போன்ற பணிகளை ஒருங்கிணைப்பு அலுவலா் மேற்கொள்வாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews