தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 04, 2020

Comments:0

தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது, கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும், இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம். தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம், அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.
200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. உடனேயே அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால், எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள். மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது, உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை. இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது.
9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும் அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள். திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள். அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள். மருத்துவர்களையும் செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன.
தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர் வந்திருக்கிறார்கள். மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது நுழைவு அனுமதி இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஊரடங்கு வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும் தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார். தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews