சிபிஎஸ்இ குழப்பத்தால் மாணவர்கள் பரிதவிப்பு - பிளஸ் 2 குரூப்பில் பாடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் - Students are suffering due to CBSE confusion - Problem in choosing subjects in Plus 2 group
சிபிஎஸ்இ இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்திய ஆன்லைன் மதிப்பீட்டு முறை மற்றும் விடைத்தாள் நகல் குளறுபடியால் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தவறான பாடத் தேர்வு முறையால் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை நாடு முழுவதும் 17.68 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் மே 13-ம் தேதி வெளியாகின. 85.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி 3.19 சதவீதம் குறைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டில்
இந்த முறை ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) எனப்படும் ஆன்லைன் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு, ஆன்லைனிலேயே ஆசிரியர்கள் திருத்தப் பணியை மேற்கொண்டனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கும் ஆன்லைன் மதிப்பீட்டு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காமல் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் சிபிஎஸ்இ வழங்கியுள்ள முக்கிய பாடங்கள், கூடுதல் பாடங்கள் பட்டியலை தேர்வு செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. பள்ளி நிர்வாகங்கள் இதை மாற்றி தேர்வு செய்வதால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, விவசாயம், தோட்டக்கலை, வனவியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்கள் சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மேற்கண்ட படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித அறிவியல், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட சில பாடங்களை தகுதியாக வைத்துள்ளது.
ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், முக்கிய பாடங்கள், கூடுதல் பாடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளதால், பாடங்களை தேர்வு செய்வதில் பள்ளிகளுக்கு குழப்பம் ஏற்பட்டு, சில பள்ளிகள், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுடன் கணினி அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களை தேர்வு செய்வதற்கு பதில், கூடுதல் பாட வரிசையில் உள்ள உடற்கல்வி பாடத்தை தேர்வு செய்கின்றன. கூடுதல் பாட வரிசையில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றன.
தேர்வு முடிந்து மதிப்பெண் சான்றிதழ் பெறும்போதுதான் மாணவர்களுக்கு இந்த குழப்பம் தெரியவருகிறது. மதிப்பெண் சான்றிதழில் முக்கிய பாடங்களில் உடற்கல்வியும், கூடுதல் பாடப்பிரிவில் கணினி அறிவியல் பாடமும் இடம்பெறும் நிலையில், வேளாண் பல்கலைக்கழகம் அதை ஏற்பதில்லை. இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முதன்மை பாடங்களுடன் கணினி அறிவியல் பாடம் இடம்பெறாததே அதற்கு காரணம். 4-வது பாடமான கணினி அறிவியல், முதன்மை பாடப் பிரிவில் இடம்பெறாததால் அதை கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இணைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயக்கம் காட்டுகிறது. கணினி அறிவியலோ, கணித பாடமோ முதன்மை பாடப் பிரிவில் இருந்தால் எந்த பிரச்சினையும் எழாது.
எனவே, வரும் ஆண்டில், முதன்மை பாடம் மற்றும் கூடுதல் பாடங்களை தேர்வு செய்வதில் ஏற்படும் குழப்பங்களை தடுக்க வேண்டும். பள்ளி நிர்வாகங்கள் தவறாக பாடங்களை தேர்வு செய்ததால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்க உதவும் வகையிலும் சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.