TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 25, 2018

Comments:0

TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது?


சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர்.

தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 13-ம் தேதி வெளியிடப்படவில்லை. வழக்கமாக உத்தேச விடைகள் வெளியிடப்பட்டதும் அடுத்த சில நாட்களிலேயே தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுவிடும்.

ஆனால், முதல்முறையாக நடத்தப்பட்ட சிறப்பாசிரியர் தேர்வில், உத்தேச விடைகள் வெளியிட்டு 8 மாதங்கள் கடந்தும் தேர்வு முடிவு வெளியிடப்படாத நிலையில், தேர்வெழுதியவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம், பள்ளிக் கல்வி அமைச்சரை சந்தித்து முறையிடுவது என தொடர்ந்து பல்வேறு நிலைகளில் போராடி வந்தனர்.

ஆன்லைனில் விடைத்தாள் நகல்

இந்த தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கடந்த ஜூன் 14-ம் தேதி மதிப்பெண் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் விடைத்தாள் நகலை யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்க்கலாம் என்றிருந்த நிலையில், சிறப்பாசிரியர் தேர்வில், அதுபோன்று இல்லாமல் அவரவர் தங்களின் விடைத்தாள் நகலை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து கணினியில் பார்க்க மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆன்லைனில் பார்க்கக்கூடிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் காலதாமதம் செய்துவருவதாக தேர்வெழுதியவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கேட்டால் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்றும் விரைவில் வரும் என்று சொன்ன பதிலையே மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் என்று தேர்வர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.

பொதுவாக, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான முடிவுகள் 3 மாதங்கள் அல்லது 5 மாதங்களில் வெளியிடப்பட்டுவிடும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், தேர்வு முடிவடைந்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தேர்வர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’

சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு ‘ஒரு காலியிடத்துக்கு 2 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட வேண்டும்.

அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு ஏற்ப மதிப்பெண் (அதிகபட்சம் 5) அளிக்கப்படும். அதைத்தொடர்ந்து, எழுத்துத்தேர்வு மதிப்பெண், பதிவுமூப்பு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுபட்டியல் வெளியிடப்படும்.

மதிப்பெண் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்றவர்கள் பட்டியலே வெளியிடப்படாத நிலையில் எப்போது இறுதி தேர்வுபட்டியல் வெளியிட்டு பணிநியமனம் வழங்கப்போகிறார்களோ? என்று தேர்வெழுதியவர்கள் அச்சத்தில் உள்ளனர். இனியும், காலதாமதம் செய்யாமல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews