தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அமலுக்கு வந்தது: தமிழக அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 11, 2026

Comments:0

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அமலுக்கு வந்தது: தமிழக அரசு அரசாணை வெளியீடு



தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அமலுக்கு வந்தது: தமிழக அரசு அரசாணை வெளியீடு The Tamil Nadu Assured Pension Scheme (TAPS) has come into effect: The Tamil Nadu government has issued a government order.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamil Nadu Guaranteed Pension Scheme - TNGPS) ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இத்திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

நிதித் துறை செயலாளர் உதயச்சந்திரன் பிறப்பித்த இந்த அரசாணையில், திட்டத்தின் விரிவான அம்சங்கள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அமலாக்க தேதி: தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TNGPS) ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஓய்வூதியத் தொகை: இத்திட்டத்தின் கீழ் வரும் தகுதியுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், அவர்கள் கடைசியாகப் பெற்ற மாதச் சம்பளத்தில் 50 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஊழியர் பங்களிப்பு: அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் 10 சதவீதத்தை இத்திட்டத்திற்கு பங்களிக்க வேண்டும். இதற்கான கூடுதல் நிதியை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் இறந்தால், அவர் கடைசியாகப் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அகவிலைப்படி: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, தற்போதைய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும்.

பணிக்கொடை (Gratuity): ஓய்வு பெறும் அல்லது பணியின்போது காலமான அரசு ஊழியர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் பணிக்கொடையாக வழங்கப்படும்.

சிறப்பு கருணை ஓய்வூதியம்: இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்குச் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்குப் பொருந்தும்?

புதிய பணியாளர்கள்: இம்மாதம் (ஜனவரி) 1 முதல் தமிழக அரசுப் பணியில் சேரும் அனைத்துத் தகுதியுள்ள ஊழியர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாகும்.

தற்போது பணியில் உள்ளோர்: கடந்த ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பணியில் இருந்த அனைத்து அரசு ஊழியர்களும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) அல்லது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஓய்வு பெறும் ஊழியர்கள்: ஜனவரி 1ஆம் தேதி அல்லது அதற்குப் பின் ஓய்வு பெறும் அனைத்துத் தகுதியுள்ள அரசு ஊழியர்களும் இத்திட்டத்தின் கீழ் வருவர். திட்டத்தின் பின்னணி:

அரசு ஊழியர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) கடந்த 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 2004 ஜனவரி 1ஆம் தேதி தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) அறிவிக்கப்பட்டபோதும், தமிழக அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்தியது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, தமிழகத்திற்குப் பொருத்தமான ஓய்வூதிய முறையைப் பரிந்துரைக்க, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. இக்குழு தனது பரிந்துரைகளை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அரசுக்கு அளித்தது. இந்தப் பரிந்துரைகளை கவனமாக ஆய்வு செய்த தமிழக அரசு, 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (TAPS) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்து, அதற்கான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான விரிவான விதிகள், தகுதி நிபந்தனைகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தல் நடைமுறைகள் ஆகியவை விரைவில் தனித்தனியாக அறிவிக்கப்படும் என்றும் நிதித் துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews