மாநிலம் முழுவதும் "சூப்பர்- 30' சிறப்பு வகுப்புகள்: கல்வியாளர்கள் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 25, 2018

Comments:0

மாநிலம் முழுவதும் "சூப்பர்- 30' சிறப்பு வகுப்புகள்: கல்வியாளர்கள் கோரிக்கை!


பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்சூப்பர்- 30 சிறப்பு வகுப்புகளை மாநிலம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவம்- 30, சிறப்பு பொறியியல்- 30 ஆகிய பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, "சூப்பர்- 30' என்னும் பெயரில் சிறப்பு வகுப்புகள் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன.இதற்காக, பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

425 மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும், 450 மதிப்பெண் பெற்ற பிற மாணவர்களும் நுழைவுத் தேர்வெழுத தகுதியானவர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வகுப்புகளில் அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர். மேலும், இந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பாடத்துடன் கூடிய தன்னம்பிக்கையூட்டும் மனவளப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், இந்த மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பிரதான சுற்றுலா இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.இந்த சிறப்பு வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 1,100 மதிப்பெண்களுக்கும் அதிகமாகப் பெற்று மாவட்ட அளவில்சிறப்பிடம் பெற்றனர். இதனால் இந்த வகுப்புகள் பெற்றோரிடமும், கல்வியாளர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் இந்த வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதையடுத்து, இத்திட்டத்தை கொண்டுவந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது முயற்சியால், பாடாலூர், குரும்பலூர், சு.ஆடுதுறை ஆகிய அரசுப் பள்ளிகளிலும் சூப்பர்- 30 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்த சிறப்பு வகுப்பில் சேர்ந்து பயின்ற 259 மாணவ, மாணவிகளில் இதுவரை 8 பேர் மருத்துவம், 5 பேர் செவிலியர், 2 பேர் கால்நடை மருத்துவம், அண்ணா பல்கலைக் கழகம் உள்பட அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் 104 பேரும், 70-க்கும் மேற்பட்டோர் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் பயில்கின்றனர். மேலும், அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் சிறப்பு வகுப்பில் பயின்ற 20 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் பணியிடை மாற்றம், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பின்மை, நிதி பற்றாக்குறையால் குரும்பலூர், பாடாலூர், சு.ஆடுதுறை ஆகிய பள்ளிகளில் செயல்பட்டு வந்த சிறப்பு வகுப்புகள் முடங்கின.இதேபோல, பெரம்பலூரில் சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்இன்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சூப்பர்- 30 சிறப்பு வகுப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என். ஜெயராமன் கூறியது:பிகார் மாநிலம் பாட்னாவில் ஆனந்த்குமார் என்பவர் தனது ஐ.ஐ.டி. படிக்கும் ஆசை நிறைவேறாததால், ஆர்வம் கொண்ட மாணவர்களுக்காக சூப்பர்- 30 என்னும் பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதையறிந்த பெரம்பலூர்மாவட்ட ஆட்சியராக இருந்த தரேஸ் அகமது, சூப்பர்- 30 என்னும் உறைவிட சிறப்பு பயிற்சி வகுப்புகளை பெரம்பலூரில் தொடங்கினார்.தமிழகத்தில் பெரம்பலூரில் சூப்பர்- 30, ராமநாதபுரத்தில் எலைட் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பலர் பயனடைந்துள்ளனர். பெரம்பலூரில், ஒருசில நடைமுறை பிரச்னைகளால் இத்திட்டம் தொய்வடைந்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்ததமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், இத்திட்டத்துக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கினால் கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு, கிராமப்புற ஏழை மாணவர்கள் சிறந்த கல்விநிறுவனங்களில் உயர்கல்வி பயில வாய்ப்பாக அமையும். தமிழக அரசின் நிதியும், மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பும் இருந்தாலே இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாகச் செயல்படுத்தலாம் என்றார் அவர்.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது குறித்த கருத்துரு பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செயல்படுத்தி வரும் தமிழகஅரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews